‘திமுகவின் கம்பீரத்தை சிதைத்து விடாதீர்கள்’ – செந்தில் பாலாஜிக்கு எதிராக சீறுகிறார் என்கேகேபி ராஜா

0
21

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 39 சட்டமன்ற தொகுதிகளின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக தலைமை நியமித்துள்ளது.

இந்த மாவட்டங்களில், செந்தில் பாலாஜி யாரைக் கை காட்டுகிறாரோ அவருக்குத்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பது உடன்பிறப்புகளின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், இந்த 5 மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்கள், செந்தில் பாலாஜியின் விசுவாசிகளாக தங்களைக் காட்டிக் கொள்வதில் கூடுதல் அக்கறை செலுத்தத் தொடங்கி விட்டனர்.

இதன் உச்சமாக, சமீபத்தில் செந்தில் பாலாஜியின் பிறந்தநாள் வந்த நிலையில், நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். போஸ்டர்கள், சமூக வலைதளங்கள், ரீல்ஸ் இவற்றோடு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வரை கொண்டாட்டம் உச்சத்திற்கு சென்றது.

கொங்கு மண்டல திமுகவில் பரவும் இந்த ‘பாலாஜி புராணம்’, மூத்த திமுக நிர்வாகிகளிடையே எரிச்சலையும், வருத்தத்தையும் கிளப்பி விட்டுள்ளது. அதன் எதிரொலி, ஈரோடு மாவட்ட திமுக முன்னாள் அமைச்சர் என்.கே.கே பி.ராஜாவின் வடிவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செந்தில் பாலாஜி பிறந்தநாளை ஒட்டி, ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் எம்.சிவபாலன் வடிவமைத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘மாண்புமிகு மேற்குமண்டலமே…’ எனக் குறிப்பிடப்பட்டு, செந்தில் பாலாஜியின் நான்கு படங்கள் மையப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி படங்கள் மேல் பகுதியில் சிறிதாகவும், பெரியார், அண்ணா, கலைஞர் படங்கள், ‘ஸ்டாம்ப்’ சைசிலும் பதிவிடப்பட்டுள்ளது.

இதேபோல், திமுக தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த எம்.ஜூனாயத் என்பவரது வாழ்த்து செய்தியில் திமுக தலைவர்கள் பெயர், படங்கள் இடம்பெறவில்லை.

இந்த இரண்டு போஸ்டர்களையும் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்த முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா, ‘ஏண்டா மானங்கெட்டு திரிகிறீர்கள்… ஜெயிக்கச் சொல்லுங்கடா பார்க்கலாம்… ஒரு பதிவிலே தலைவர் (கலைஞர்) படமே இல்லை. இன்னொன்றில் தலைவர் படம் ஸ்டாம்ப் சைசில் இருக்கு. அடுத்து தளபதி (ஸ்டாலின்) படத்தை விட, இவரோட 4 படங்கள் போஸ்டரில் பெரிசா போட்டிருக்கு… ஏண்டா டேய்… இதுக்கு கூட ரோசம் வர்லேன்னா, அப்புறம் எதுக்குடா கருப்பு, சிவப்பு கொடி கட்டுறீங்க…

மனுஷனா, திமுககாரனா இருக்கணும்னு யோசிங்க. ரொம்ப அசிங்கமா போகுது… 18 வயசிலே இருந்து நான் கருப்பு, சிவப்பு கொடி கட்டியவன். இந்த படத்தை பார்த்தபிறகு, நானும் எதுவும் சொல்லலைன்னா, வேறு யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க’ என்று வாய்ஸ் மெசேஸ் போட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து என்.கே.கே.பி.ராஜாவிடம் பேசினோம். அவர் கூறியதாவது: எங்கள் குடும்பம் பாரம்பரிய திமுக குடும்பம். என் தந்தை பெரியசாமியும், நானும் அமைச்சர்களாக இருந்தவர்கள். திமுக மாவட்ட செயலாளர்களாக இருந்து கழகத்தை வழிநடத்தியவர்கள். ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையன், முத்துசாமி போன்ற பலமான அதிமுக அமைச்சர்கள் இருந்தபோதும், கட்சியை கம்பீரம் குறையாமல் காத்து நின்றுள்ளோம்.

திமுகவில் எந்த நிகழ்வு நடந்தாலும் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர், தளபதி படங்கள் மற்றும் மாவட்ட செயலாளர் பெயரை போட்டுத்தான் எந்த விளம்பரமாக இருந்தாலும் தயார் செய்யப்படும். ஆனால், சமீபகாலமாக, செந்தில் பாலாஜியை பொறுப்பாளராக அறிவித்த பின், இந்த விதிமுறைகள் மதிக்கப்படுவதில்லை. அவரை துதி பாடி போஸ்டர் போட்டால், திமுகவில் கட்சி பதவிகளையும், எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை திட்டமிட்டு விதைக்கப்பட்டுள்ளது.

கருப்பு சிவப்பு வேட்டி கட்டி, கொடி பிடித்து, மேடை அமைத்து, போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்று, ஆளுங்கட்சியின் அடக்குமுறையை எதிர்கொண்டு கம்பீரமாக வளர்ந்தவர்கள் திமுகவினர். அந்த கம்பீரத்தை சிதைக்கும் வேலையை, சம்மந்தப்பட்டவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது எனது ஆதங்கம், கோபம் மட்டுமல்ல. கொங்கு மண்டலத்தில் உள்ள மூத்த திமுக நிர்வாகிகள், தொண்டர்களின் ஆதங்கம். நான் அதை வெளிப்படுத்தியுள்ளேன். அவ்வளவுதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கொங்கு மண்டலத்தில் என்.கே.கே.பி.ராஜா எழுப்பிய இந்த கலகக்குரலை, திமுக தலைமை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது, செந்தில் பாலாஜியின் எதிர்கால நடவடிக்கைகளில் இருந்து தெரியவரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் திமுக மூத்த நிர்வாகிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here