மலையாள நடிகரான அஜ்மல் அமீர், மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’, ‘கோ’, விஜய்யின் ‘கோட்’ உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் பாலியல் ரீதியாக சில பெண்களிடம் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ மற்றும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலர் கண்டனங்களைத் தெரிவித்தனர். இவர் மீது இதற்கு முன்பும் பாலியல் புகார்கள் கூறப்பட்டுள்ளன.
இந்த ஆடியோ விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, அதை மறுத்து அஜ்மல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளி யிட்டிருந்தார். அதில், “என் பெயரை களங்கப்படுத்தும் விதமாக இதுபோன்ற ஆடியோக்களை வெளியிட்டவர்கள், இந்த அக்கறையை, அன்பை, சமுதாயத்தின் மீது காட்டினால் நன்றாக இருக்கும். கட்டுக்கதைகளோ, ஏஐ மூலம் குரல் மாற்றம் செய்வதாலோ அல்லது அற்புதமான எடிட்டிங் மூலமோ என் திரையுலக பயணத்தை அழித்து விட முடியாது” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகையும் ஒப்பனைக் கலைஞருமான ரோஷ்னா ராய், தனக்கு அஜ்மல் அனுப்பிய குறுஞ்செய்தியின் ‘ஸ்கிரீன் ஷாட்’டை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, ‘என் இன்பாக்ஸைப் பார்த்தேன், பாருங்கள், அவரின் ஏஐ செய்தி இங்கே கிடக்கிறது” என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.
மேலும் சில பெண்கள், அஜ்மல் அமீரிடமிருந்து மோசமான அனுபவங்களை எதிர்கொண்டதாகவும், தவறான செய்திகளையும் வீடியோவையும் அனுப்பியதற்கு தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.