இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி நெருக்கடியுடன் களமிறங்குகிறது. ஏனெனில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி தொடரில் 0-1 என பின்தங்கி உள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் 2-வது போட்டியில் இன்று அடிலெய்டில் மோதுகின்றன.
பெர்த் ஆட்டத்தில் அடிக்கடி மழை குறுக்கிட்டது இந்திய அணியின் பேட்டிங் உத்வேகத்துக்கு தடையாக இருந்தது. 7 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய ரோஹித் சர்மா 8 ரன்களும், விராட் கோலி 8 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஷுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரிடம் இருந்தும் எதிர்பார்த்த அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை. அக்சர் படேல், கே.எல்.ராகுல் ஆகியோர் போராடிய போதிலும் அது வலுவான இலக்கை அமைப்பதற்கு போதுமானதாக இல்லாமல் இருந்தது.
அறிமுக வீரராக களமிறங்கிய நித்திஷ் ரெட்டி 11 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து கவனம் ஈர்த்தார். பந்து வீச்சிலும் இந்திய அணியிடம் இருந்து மேம்பட்ட செயல்திறன் வெளிப்படவில்லை. 131 ரன்களே இலக்காக கொடுத்த போதிலும் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எந்த ஒரு கட்டத்திலும் இந்திய பந்து வீச்சாளர்கள் அழுத்தம் கொடுக்கவில்லை. இந்த வகையில் ஹர்திக் பாண்டியா இல்லாதது அணியின் சமநிலையை வெகுவாக பாதித்துள்ளது. அவருக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள நித்திஷ் குமார் ரெட்டி தற்போதுதான் உருவாக்கப்பட்டு வருகிறார்.
பந்து வீச்சை பலப்படுத்தும் வகையில் இன்றைய ஆட்டத்தில் ஒரு சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. அநேகமாக குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்படக்கூடும். இந்த மாற்றம் நிகழ்ந்தால் வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா நீக்கப்படக்கூடும். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி நெருக்கடியுடன் களமிறங்குகிறது. ஏனெனில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும். இதனால் இந்திய அணி வீரர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும்.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டக்கூடும். மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் வேகக்கூட்டணி இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசைக்கு மீண்டும் ஒரு முறை சவால் அளிக்க முயற்சிக்கக்கூடும். அடிலெய்டு ஆடுகளத்திலும் பவுன்ஸ் அதிகம் இருக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் குனேமன், ஜோஷ் பிலிப் ஆகியோருக்கு பதிலாக ஆடம் ஸாம்பா, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரி ஆகியோர் களமிறங்க உள்ளனர். பேட்டிங்கில் முதல் போட்டியில் 46 ரன்கள் சேர்த்த மிட்செல் மார்ஷிடம் இருந்து மேலும் சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட் ஆகியோரும் மட்டையை சுழற்றுவதில் கவனம் செலுத்தக்கூடும்.
மைதான ராசி எப்படி? – ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்களிலேயே அடிலெய்டு ஓவல் மைதானம்தான் இந்திய அணிக்கு மிகவும் ராசியானது. இங்கு இந்திய அணி 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தை டையில் முடித்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் இந்திய அணி இங்கு தோல்வியை சந்திக்கவில்லை. கடைசியாக 2008-ம் ஆண்டு பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்து இருந்தது.
தீவிர பயிற்சி: முதல் போட்டியில் சிறப்பாக செயல்படட தவறிய ரோஹித் சர்மா அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று பயிற்சிக்காக 45 நிமிடங்களுக்கு முன்பே வந்து சேர்ந்தார். தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முன்னிலையில் த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட்களான தயானந்த் கரானி, ராகவேந்திரா ஆகியோர் ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர். இதை கம்பீர் கூர்ந்து கவனித்தார். நேற்றைய பயிற்சி கட்டாயம் இல்லை என்பதால் விராட் கோலி கலந்து கொள்ளவில்லை. முன்னதாக செவ்வாய் கிழமை நடைபெற்ற பயிற்சியில் விராட் கோலி கூடுதல் நேரம் செலவிட்டார்.
அடிலெய்டு ஓவல் ஆடுகளம் எப்படி இருக்கும்? – அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இதுவரை இந்தியாவின் வெற்றிக்கான முதன்மையான காரணமாக அமைந்தது ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்ததுதான். பெர்த் ஆடுகளத்தின் வேகம், பவுன்ஸ் மற்றும் சீம் அசைவைப் போலல்லாமல், அடிலெய்டு ஓவல் பொதுவாக பேட்டிங்குக்கு ஏற்ற மேற்பரப்பை வழங்குகிறது, இது சமமான, கணிக்கக்கூடிய பவுன்ஸ் மற்றும் கணிசமாக குறைவான பக்கவாட்டிலேயே பந்து அசைவுகள் இருக்கும். இது பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தை நம்பி தங்கள் ஷாட்களை நம்பிக்கையுடன் விளையாட உதவியாக இருக்கும்.