‘இந்த முறை கள்ளக்குறிச்சி எங்களுக்குத்தான்’ – வழக்கை வைத்து வாய்ப்பு தேடும் விசிக

0
27

கலவரத்தாலும் கள்ளச்சாராய பலிகளாலும் கறை படிந்து ஆளும் திமுகவுக்கு பெரும் நெருக்கடியை தந்த தனித் தொகுதி கள்ளக்குறிச்சி. தற்போது அதிமுக வசம் இருக்கும் இந்தத் தொகுதியை இம்முறை தங்கள் பிடிக்குள் கொண்டுவரும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது திமுக.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரான புவனேஸ்வரி பெருமாளை கள்ளக்குறிச்சிக்கான வேட்பாளராகவே கிட்டத்தட்ட தெரிவு செய்துவிட்ட கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏ-வுமான வசந்தம் கார்த்திகேயன், அவரை தொகுதிக்குள் முன்னிலைப்படுத்தி வருகிறார்.

இவருக்குப் போட்டியாக விசிகவின் மண்டலப் பொறுப்பாளரான திராவிட மணி இம்முறை தனக்குத்தான் கள்ளக்குறிச்சி என காதுபடவே பேச ஆரம்பித்திருப்பது கூட்டணிக்குள் புகைச்சலை உண்டாக்கி இருக்கிறது. கடந்த 2022-ல் நடந்த கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் திராவிட மணி 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்.

இந்த வழக்கையே தனக்குச் சாதமாக்கிக் கொண்டு கிட்டத்தட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் திராவிடமணி. இங்கு சிட்டிங் எம்எல்ஏ-வாக இருக்கும் மா.செந்தில்குமார், அடிப்படையில் பெயின்டராக இருந்தவர். இபிஎஸ் தனது பிரச்சாரங்களில் “ஏழைத் தொழிலாளி செந்தில்குமாரை எம்எல்ஏ-வாக்கிய பெருமை அதிமுகவைச் சாரும்” என்று பேசி வருகிறார்.

இது ஒருபக்கம் செந்தில் குமாருக்கு பெருமையாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சிக்கலையும் உண்டாக்குகிறது. பழனிசாமி செந்தில்குமாரின் பெயரை அடிக்கடி உச்சரிப்பதை இந்த மாவட்டத்தில் இருக்கும் அதிமுக முக்கிய தலைகள் அவ்வளவாய் ரசிக்கவில்லை.

அதனால் செந்தில்குமாருக்கு மாற்றாக, எம்ஜிஆர் இளைஞரணி மாவட்டத் துணைச் செயலாளர் ராஜீவ் காந்தியை தயார்ப்படுத்தி வருகிறார்கள். இப்படியொரு திட்டம் இருப்பதால், இம்முறை நமக்கு சீட் கிடைக்கும் என நினைத்திருந்த முன்னாள் எம்எல்ஏ-க்களான பிரபு, அழகுவேல் பாபு ஆகியோரும் அப்செட்டில் இருக்கிறார்கள்.

இருப்பினும் அழகுவேல் பாபு பழனிசானியின் வலதுகரமான சேலம் இளங்கோவனையும், பிரபு முன்னாள் அமைச்சர் மோகனையும் சுற்றிவருவதாகச் சொல்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில், பாஜக வரவான தடா பெரியசாமியும் கள்ளக்குறிச்சிக்காக சங்கர மடத்தின் வழியாக முயற்சித்து வருவதாகவும் ஒரு செய்தி கசிகிறது.

கடந்த முறை இந்தத் தொகுதியை காங்கிரஸூக்கு தந்துவிட்டது திமுக. அதேபோல் இம்முறையும் தொகுதியை கூட்டணிக்கே கொடுப்பார்கள் என அடித்துச் சொல்லும் விசிக திராவிட மணி, “எங்கள் தலைவரிடம் இம்முறை தொகுதியை நமக்குக் கேட்டுப் பெற வேண்டும் எனச் சொல்லி இருக்கிறோம்.

நான் போட்டியிட்டால் திமுகவினர், அண்ணன் கார்த்திகேயனே போட்டியிடுவதாக நினைத்து எனக்காக வேலை செய்வார்கள்” என்று பெருத்த நம்பிக்கையுடன் சொல்கிறார். இவருக்குப் போட்டியாக திமுக தயார்படுத்தும் புவனேஸ்வரி பெருமாளோ, “இப்போதைக்கு எதையும் என்னால் கூற முடியாது. அண்ணன் கார்த்திகேயன் என்ன சொல்கிறாரோ அதன்படி செயல்படுவேன்” என்று பக்கா அரசியல்வாதியாகப் பேசுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here