காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாலும், அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்களை மழைநீர் சூழ்ந்ததாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது.
இதில் 70 சதவீதம் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் 30 சதவீதம் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இதில், அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் முறையாக இயக்கம் செய்யப்படாமல் தேங்கியுள்ளதால், கொள்முதல் பணிகளிலும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால், நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்களும், அண்மையில் நடவு செய்யப்பட்டுள்ள இளம் சம்பா பயிர்களையும் மழைநீரில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம், பூண்டி, நல்லவன்னியன் குடிகாடு, அம்மாபேட்டை, ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாரான சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நெற்கதிர்கள் மழையால் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன.
இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்கதிர்கள், மன்னார்குடி, வடுவூர், முத்துப்பேட்டை, கொரடாச்சேரி, திருவாரூர், காட்டூர் போன்ற பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள், மயிலாடுதுறை மாவட்டத்தில் 500 ஏக்கர் குறுவை நெற்கதிர்கள், மயிலாடுதுறை, கொள்ளிடம், குத்தாலம் போன்ற பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள், நாகை மாவட்டத்தில் தலையாமழை, கீராந்தி, சின்னதும்பூர், பெரிய தும்பூர், சோழவித்தியாபுரம், கிராமத்துமேடு, கருங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் 1,000 ஏக்கர் குறுவை நெற்கதிர்கள், கீழ் வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் போன்ற பகுதிகளில் சுமார் 1 லட்சம் ஏக்கர் இளம் சம்பாபயிர்கள் மழைநீரில் மூழ்கியும், சூழ்ந்தும் உள்ளன.
இந்த மழைநீர் வடிந்தால் மட்டுமே குறுவை நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியும். ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வயல்களில் உள்ள தண்ணீரை வாய்க்கால்கள், வடிகால்கள் மூலம் வடிய வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், அறுவடைக்குதயாரான நெற்கதிர்களில் நெல்மணிகள் முளைத்துவிடும் என்பதாலும், இளம் சம்பாபயிர்கள் அழுகிவிடும் என்பதாலும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அடி மேல் அடி: தமிழக விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன் கூறியது: டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட 6 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்களில், 4.20 லட்சம் ஏக்கரில் அறுவடை முடிந்துள்ளது. ஆனால், அறுவடை செய்த நெல்லில் 20 சதவீத நெல் மணிகளை, கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் தொடர்ந்து மழை பெய்வதால், நெல்லின் ஈரப்பதம் இயல்பாகவே அதிகமாக காணப்படுகிறது. இதனால் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். மேலும், அறுவடை செய்யாமல் உள்ள நெற்கதிர்களையும், இளம் சம்பா பயிர்களையும் மழைநீர் சூழ்ந்துள்ளது. நெல் மணிகள் முளைத்துவிடும் என்பதாலும், இளம் சம்பா பயிர்களை அழுகிவிடும் என்பதால் விவசாயிகளுக்கு கவலை ஏற்பட்டுள்ளது என்றார்.