நிழலும் உணர்வும்: திரை உலகின் இருள் பேசும் கலை | ஒளி என்பது வெளிச்சமல்ல 02

0
24

ஒளி சினி​மா​வின் ஆன்மா எனில், நிழல் அதன் நிசப்​த​மான குரல். அது வெறும் இருளல்ல. ஒரு காட்​சி​யின் உணர்ச்​சி, மனநிலை, தத்​து​வம், கூடவே கதை​யின் மறை​முக​மான அடுக்​கு​களை​யும் வெளிப்​படுத்​தும் சக்தி கொண்​டது. ஒளி கண்​களுக்​குத் தெரியலாம், ஆனால் நிழல் நேராக மனதுடன் பேசுகிறது. சினிமா வரலாற்​றில் பல ஒளிப்​ப​தி​வாளர்​கள் நிழலைப் பயன்​படுத்தி காட்​சிகளை மட்​டும் அழகுபடுத்​தாமல், கதை​யின் உள் உலகை​யும் செதுக்​கி​யுள்​ளனர்​.

கே.எஸ். பிரசாத் – மர்மத்தைச் செதுக்கிய நிழல்கள்: ஆரம்​ப​கால வண்​ணப்​படங்​களில் ஒன்​றான ‘பு​திய பறவை’​யில் கே.எஸ். பிர​சாத், நிழலின் சக்​தியை அசா​தா​ரண​மான அளவுக்​குக் கொண்டு சென்​றார். நீண்ட நிழல்​களால் மர்​மத்​தைச் செதுக்​கி, வண்​ணப்​படங்​களின் ஆரம்ப காலத்​தில் கடின​மான வண்ண அடுக்​கு​களை உரு​வாக்​கி​னார். ஒளி மற்​றும் நிழலின் நுண்​ணிய சமநிலை​யால் அவர் அமைத்த காட்​சிகள் இன்​று​வரை ஒரு பாட​மாக நிற்​கின்​றன.

பி.எஸ்.நிவாஸ் – கனவின் நிழலில் பயம்: ‘சிகப்பு ரோஜாக்​கள்’ போன்ற படங்​களில் பி.எஸ். நிவாஸ், நிழலை வெறும் இருளாக அல்​லாமல் கனவாகப் பயன்​படுத்​தி​னார். மென்​மை​யான, மாயம் கலந்த நிழல்​கள், காட்​சிகளில் ஓர் உள் மன உளைச்​சலை உரு​வாக்​கின. அந்த கனவூட்​டும் வெளிச்​ச நிழல் கலவையே அந்​தக் கதை​யின் மனவியல் பயத்​தைப் பேசச் செய்​தது.

அசோக் குமார் – நகர வாழ்க்கையின் நிழல்: தேசிய விருது பெற்ற ‘நெஞ்​சத்தை கிள்​ளாதே’ படத்​தில் அசோக் குமார் பயன்​படுத்​திய மித​மான நிழல்​கள், நகர வாழ்க்​கை​யின் நடுத்தர மக்​களின் உணர்ச்​சிகளை மெல்​லிய ஓவிய​மாக வரைந்​தன. அவர் நிழலை ஒரு கதா​பாத்​திர​மாகவே வடிவ​மைத்​து, உறவு​களின் வெப்​பத்​தை​யும் தூரத்​தை​யும் ஒரே நேரத்​தில் உணர்த்​தி​னார்.

ஹெச்.எம்.ராமச்சந்திரா – இயற்கையின் மனநிலை: தேசிய விருதைப் பெற்ற கன்னட திரைப்​பட​மான ‘த்​வீ​பா’​வில்​(Dweepa) ஒளிப்​ப​தி​வாளர் ராமச்​சந்​திரா, நிழலை வெறும் காட்​சி​யமைப்​பாக அல்​லாமல், சூழலியல் மாற்​ற​மும் மனித மனதின் தனிமை​யும் பிர​திபலிக்​கும் கரு​வி​யாக மாற்​றி​னார்.

தீவு வெள்​ளத்​தில் தனிமைப்​படும் கதா​பாத்​திரங்​களின் உள்​ளார்ந்த போராட்​டங்​களை​யும், இயற்​கை​யின் பரி​மாற்​றங்​களை​யும் அவர் நிழல்​களின் வழியே காட்​சிப்​படுத்​தி​னார். மேகமூட்​ட​மான வான​மும் மழைத் துளி​களும் மாறும் ஒளி நிலைகளும் இணைந்த அந்த நிழல்​கள், மனிதர்​கள் சுற்​றுப் புறத்​துடன் கொண்ட உறவின் மாறு​பாட்​டை​யும், அவர்​களின் மன உளைச்​சலை​யும் ஆழமாக வெளிப்​படுத்​தின. இங்கு நிழல் ஒரு மனநிலை​யும், ஒரு காலநிலைப் பதி​வும் ஆகிறது.

பினோத் பிரதான் – இருளின் கவிதை: ‘பரிண்டா’ (1989) என்ற இந்திப் படத்தில் பினோத் பிரதான் நிழலைப் பயன்படுத்திய விதம் இந்திய நகர சினிமாவின் புதிய அத்தியாயமாக மாறியது. மும்பையின் இருண்ட தெருக்கள், குற்ற உலகின் அச்சம், சகோதரர்களின் உள்ளகப் போராட்டம் — இவை அனைத்தும் நிழல்களின் வழியே உயிர்பெற்றன. சில நேரங்களில் நிழல்கள் கதாபாத்திரங்களை விடப் பெரிதாகப் பேசின. அந்த ஒளி-நிழல் அமைப்பே நகரத்தின் உயிரும் மனித மனத்தின் இருளும் ஒன்றாகக் கலந்த காட்சியியல் கவிதையாக அமைந்தன.

நிழல் நாடக பாரம்பரியம் – மறைமுக வேர்கள்: நிழலைக் கதை சொல்​லும் மொழி​யாகப் பயன்​படுத்​தும் கலை​யின் வேர்​கள் நம்​முடைய பாரம்​பரி​யத்​திலேயே இருக்​கின்​றன. தொன்​மை​யான ‘தோற்​பாவைக் கூத்​தி’ல் வெறும் ஒளியை​யும் நிழலை​யும்
மட்​டுமே கொண்டு கதைகள் சொல்​லப்​பட்​டன.

மனித வடிவம் காணாத அந்த நிழல்​கள் தான் உணர்ச்​சிகளை​யும் சம்​பவங்​களை​யும் உரு​வாக்​கின. சினிமா ஒளிப்​ப​தி​வில் நிழலின் பயன்​பாடு, இந்த பாரம்​பரியக் கலை​யின் மறை​முகத் தாக்​கத்​தை​யும்
கொண்​டிருக்​கிறது. இருளும் ஒளி​யும் சேர்ந்து கதை சொல்​லும் பழமை​யான தமிழின் கலைமொழி, திரை​யில் புது வடிவம் பெறுகிறது.

நிழல் – இருளின் பின்னால் ஒளி: ஒளி இல்லாமல் காட்சி இல்லை என்பதுபோல, நிழல் இல்லாமல் உணர்ச்சிகள் இல்லை. ஒவ்வொரு ஒளிப்பதிவாளரும் தங்கள் கதை சொல்லும் பாணிக்கேற்ப நிழலை வடிவமைக்கிறார்கள். சிலர் மர்மமாகவும், சிலர் நிதானமான நிஜமாகவும், சில நேரம் அது ஒரு மனிதனின் பயமாக, சில நேரம் அவனுடைய காதலாக மாறுகிறது. திரையில் ஒளி கண்களுக்குத் தெரியும். ஆனால் நிழல், மனதில் பதிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here