“ராமதாஸுக்கு ஏதாவது ஆனால் சும்மா விடமாட்டேன்” – அன்புமணி பேசியது என்ன?

0
24

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வீடு திரும்பி இருக்கும் நிலையில், ராமதாஸுக்கு ஏதாவது ஆனால் சும்மா விடமாட்டேன் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் சென்னையை அடுத்த உத்தண்டியில் நேற்று நடந்தது. இதில், நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த பாமக இளைஞர் அணி தலைவர் பொறுப்புக்கு செஞ்சி சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் கணேஷ்குமார் தேர்வு செய்யப்படுவதாக அன்புமணி அறிவித்தார்.

அப்போது அன்புமணி பேசியதாவது: ராமதாஸ் என்ன காட்சிப் பொருளா? அவரை பார்ப்பதற்கு வாருங்கள் என்று போன் போட்டு அனைவரையும் வரச்சொல்கிறீர்கள். ராமதாஸுக்கு ஏதாவது ஆனால் உடன் இருப்பவர்களை நான் சும்மா விடமாட்டேன்; தொலைத்து விடுவேன்.

அவரை வைத்து டிராமா பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ராமதாஸ் நலமுடன் உள்ளார். ஆனால் அவருடன் இருப்பவர்கள், அவரை காட்சிப் பொருள் போல அனைவருக்கும் போன் செய்து வரவைத்து, அவரை ஓய்வெடுக்கவிடாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து போன் செய்வது உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் உடன் இருக்கும் வரை அவரது அறை மிகவும் பாதுகாப்பாக இருக்கும். யாரையும் அருகில் நெருங்க விடமாட்டோம். ஆனால், இப்போது யார் யாரையோ வரவைத்து திட்டமிட்டு பார்க்க வைத்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாமக 200, 300 வாக்குகளில் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது. அந்த நிலை 2026 தேர்தலில் இருக்கக் கூடாது.

தேர்தலுக்கு இன்னும் 6 மாதமே உள்ளதால் பூத் கமிட்டிகளை அமைத்து கட்சி பணியை வேகப்படுத்துங்கள். மாவட்டச் செயலாளர்களுக்கு 20 நாள் அவகாசம் கொடுக்கிறேன். உங்களது பகுதியில் எத்தனை உறுப்பினர்களை சேர்த்தீர்கள், பூத் கமிட்டி விவரங்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

எவ்வளவோ சோதனைகளை கடந்து வந்துவிட்டேன். மனதில் அவ்வளவு வலியை வைத்துக் கொண்டுதான் வெளியில் சிரித்துக் கொண்டிருக்கிறேன். பாமகவின் நிலையை உயர்த்த வேண்டும். இதுவரை 72 எம்எல்ஏ.க்கள், 16 எம்.பி.க்கள் உட்பட பாமக 35 ஆண்டு காலத்தில் பல ஆளுமைகளை உருவாக்கியுள்ளது. ஆனால், இன்னும் நாம் ஆட்சிக்கு வர முடியவில்லை என்பதை எண்ணி வருந்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here