பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் பஞ்சாபில் ரகசியமாக செயல்பட்ட பப்பர் கல்சா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 1978-ம் ஆண்டில் பப்பர் கல்சா தீவிரவாத அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 1985-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பு, 1985-ம் ஆண்டு ஜப்பானின் நரிடா சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தின் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு தீவிரவாத செயல்களில் பப்பர் கல்சாவுக்கு தொடர்பு உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பு திரைமறைவில் செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில் பஞ்சாபின் ஜலந்தரில் பப்பர் கல்சாவை சேர்ந்த 2 தீவிரவாதிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். முதல்கட்ட விசாரணையில் அவர்கள் நிஷான் ஜூரியன், ஆதேஷ் ஜமாராய் என்பது தெரியவந்துள்ளது.
இருவரும் தங்கியிருந்த வீட்டில் இருந்து 2.5 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் இருவரும் ரகசியமாக நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர்.
இதுகுறித்து பஞ்சாப் போலீஸார் கூறுகையில், “பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு சார்பில் பஞ்சாப் மாநிலத்துக்குள் ஆயுதங்கள், போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. கடந்த புதன்கிழமை பெரோஸ்பூர் பகுதியில் 5 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஐஎஸ்ஐ அமைப்போடு தொடர்புடைய சஜன், ரேஷாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து ஜலந்தரில் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்களுடன் நிஷான் ஜூரியன், ஆதேஷ் ஜமாராய் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாகிஸ்தானின் சதிகளை நாங்கள் வெற்றிகரமாக முறியடித்து வருகிறோம்” என்றனர்.