‘கூடுதல் தொகுதிகள் தராவிட்டால்…’ – செல்வப்பெருந்தகைக்கு செக் வைக்கும் காங்கிரஸ் எம்.பி-க்கள்

0
25

“இம்முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்போம்” என தேர்தலுக்குத் தேர்தல் கொளுத்திப் போடுவதும் கடைசியில், முந்தைய தேர்தலைவிட குறைவாகவே வாங்கிக் கொண்டு அமைதி ஆகிவிடுவதும் தமிழக காங்கிரஸாருக்கு பழகிப்போன சமாச்சாரம். ஆனால், இம்முறை அதிக தொகுதிகள் என்பதோடு ஆட்சியில் பங்கு என்ற முழக்கமும் காங்கிரஸ் வட்டாரத்தில் சத்தமாகக் கேட்க ஆரம்பித்திருக்கிறது. அதற்குக் காரணம், ‘அதிகாரத்தில் பங்கு’ வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக தலைவர் விஜய்.

ஆட்சியில் பங்கு தருவோம் என விஜய் சொன்னதிலிருந்தே காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கைகோக்கலாம் என்ற பேச்சும் பலமாக அடிபட ஆரம்பித்துவிட்டது. ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்டால் திமுக தலைமை சங்கடப்படக்கூடும் என்பதால் இத்தனை நாளும் அடக்கி வாசித்த காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் தேர்தல் நெருங்குவதால் இப்போது வரிசைகட்டி வாய்திறக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

“திமுகவிடம் இம்முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்பதுடன் ஆட்சியிலும் பங்கு கேட்கவேண்டும் என்பது காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது. அவர்களின் எண்ணத்தை நானும் பிரதிபலிக்கிறேன். கட்சி தலைமை இதில் உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று மைக் பிடிக்கும் இடமெல்லாம் மனுப்போட்டு வருகிறார் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் ராஜேஷ்குமார்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரியும் ராஜேஷ்குமாரின் கருத்தை வழிமொழிந்து வருகிறார். அத்தோடு நில்லாமல், “விஜய்யை கைது செய்தால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும்” என்று தவெக தரப்பையும் தாஜா செய்கிறார் அழகிரி. ஆனால், இதுகுறித்துப் பேசவேண்டியவரான தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையோ எதுவும் பேசாமல் இருக்கிறார்.

எப்போதுமே காங்கிரஸில் திமுக ஆதரவு அணி என்ற ஒன்று இருந்து கொண்டே இருக்கும். அப்படித்தான் இப்போது செல்வப்பெருந்தகையும் அவரது விசுவாசிகளும் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அதற்கு, இந்த ஆட்சியால் அவர்களுக்குக் கிடைக்கும் சில பல அனுகூலங்களும் ஒரு காரணம் என்கிறார்கள். அதேசமயம், ஒரு காரணம் சசிகாந்த் செந்தில், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோர் கொடுக்கும் சீட்களை வாங்கிக் கொண்டு திமுகவிடம் நாம் இந்தளவுக்கு சரணாகதி ஆகவேண்டியதில்லை. நமக்கு இப்போது விஜய் என்ற இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது என்ற கருத்தை தலைமைக்கு வலியுறுத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இவர்கள் மூவருமே ராகுல் காந்தியுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்கள். கூடுதல் தொகுதிகள், அதிகாரத்தில் பங்கு தர திமுக மறுத்தால் அதைத் தர தயாராய் இருக்கும் விஜய் பக்கம் செல்வதில் என்ன தவறு என்பதே இவர்களது நியாயக் கேள்வியாக இருக்கிறது.

அத்துடன் திமுகவுடன் அதி நெருக்கத்தில் இருக்கும் செல்வப்பெருந்தகைக்கு செக் வைப்பதிலும் இதில் சிலர் தீர்க்கமாக இருக்கிறார்கள். இவர்களின் ஆலோசனைப்படியே கரூர் சம்பவத்தின் போது ராகுல் காந்தி விஜய்யை போனில் அழைத்துப் பேசியதாகவும் ஒரு தகவல் உண்டு. விஜய் வட்டாரத்துடன் பழனிசாமி தரப்பில் பேசிவருவதாகச் சொல்லப்படும் நிலையிலும், பாஜக அந்தக் கூட்டணியில் இருப்பதால் விஜய் அதிமுக பக்கம் போக வாய்ப்பில்லை என்று இன்னமும் உறுதிபட நம்புகிறது செல்வப்பெருந்தகைக்கு எதிர்கோஷ்டி.

நாடார் சமூகத்து பிரபலம்: இதனிடையே, மாணிக்கம் தாகூர், ராஜேஷ்குமாரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கொண்டு வருவதற்கும் சசிகாந்த் செந்தில், தானே தலைவராக வருவதற்கும் முயற்சிப்பதாகச் சொல்கிறார்கள். ராஜேஷ்குமார் காமராஜர் காலத்தில் தெற்கில் காங்கிரஸ் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த பொன்னப்ப நாடாருக்கு உறவினர் என்பதையும் நாடார் சமூகத்து பிரபலம் என்பதையும், தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வானவர் என்பதையும் டெல்லிக்கு அழுத்தமாக எடுத்துச் சொல்லி இருக்கிறாராம் மாணிக்கம் தாகூர்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்கள், செல்வப்பெருந்தகை தலைமையில் அண்மையில் முதல்வரைச் சந்திக்கச் சென்றபோது, மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், சசிகாந்த் செந்தில் ஆகியோர் அந்த லிஸ்ட்டில் இல்லை. செல்வப்பெருந்தகையை தலைவர் பதவியில் வைத்திருந்தால் தாங்கள் நினைப்பது நடக்காது என நினைக்கும் மற்ற கோஷ்டிகள், திமுக அரசிடம் அவர் தரப்பில் சோலோவாக சாதித்துக் கொண்டிருக்கும் சில விஷயங்களை தலைமைக்கு பட்டியல் போட்டிருப்பதுடன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தனது விசாரணையை தொடங்கினால் அவரை நோக்கியும் விசாரணையை விரித்து காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை உண்டாக்கலாம் என்றும் டெல்லிக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறதாம்.

எந்த நேரத்திலும் டெல்லியில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசக்கூடிய அதிகாரம் தமிழக காங்கிரஸ் தலைவருக்கும் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருக்கும் தான் இருக்கிறது. இருந்த போதும் இவர்கள் இருவரையும் ஒருபோதும் தனியாக அழைத்துக் கருத்துக் கேட்காத தலைமை இருவரையும் ஒன்றாகத்தான் டெல்லிக்கு அழைக்கும். ஆனால், ராஜேஷ்குமாரை ராகுலும் சோனியாவும் இதுவரை இரண்டு முறை தனியாக டெல்லிக்கு அழைத்துப் பேசி இருப்பதும் பெருந்தகை வட்டாரத்தை பேரதிர்வு கொள்ள வைத்திருக்கிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here