தேர்தலுக்குத் தயாராகும் திமுக இளைஞரணி: 2 மாதங்களில் 4 மண்டல மாநாடுகளை நடத்தத் திட்டம்!

0
27

தேர்தலை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் அடுத்த 2 மாதங்களில் 4 மண்டல மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணிக்கு கூடுதலாக 5 லட்சம் பொறுப்பாளர்களை நியமிக்கவும் முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

‘வெல்வோம் 200… படைப்போம் வரலாறு என்ற முழக்கத்துடன் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது ஆளும் கட்சியான திமுக. அதன் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக நிர்வாகிகளை அழைத்துப் பேசி உட்கட்சி பிரச்சினைகளை சரிசெய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், எம்.பி-க்களுக்கும் தேர்தல் பொறுப்பு, பாக முகவர்கள் கூட்டம் என பட்டியல் போட்டு பணிகளை முடித்து வருகிறது திமுக.

இதனிடையே, திமுக இளைஞரணி சார்பிலும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, அடுத்த 2 மாதங்களில் 4 மண்டல மாநாடுகளை நடத்தத் திட்டமிடும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி சார்பில் கூடுதலாக 5 லட்சம் பொறுப்பாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக இளைஞரணி நிர்வாகிகள் சிலர், “இம்முறை 200 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்பதில் தலைமை தீவிரமாக இருக்கிறது. இதற்காக பொறுப்பாளர்கள் நியமனம், ஆய்வுக் கூட்டங்கள், உடன்பிறப்பே வா சந்திப்புகள், பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் என பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்முறை தேர்தல் பணிகளில் இளைஞரணியின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் விரும்புகிறார். அதற்காக தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து மாபெரும் மாநாடுகளை நடத்த முடிவு செய்திருக்கிறார்.

முதல் மாநாடு கோயம்புத்தூரில் அக்டோபர் 12-ம் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மண்டலங் களிலும் மாநாடுகள் நடத்தப்படும். ஒவ்வொரு மாநாட்டிலும் தலா 2 லட்சம் இளைஞர்கள்பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தப் பட்டுள்ளது. எவ்வித தவறுகளும் நடைபெறாதவாறு தேவையான ஏற்பாடுகளைச் செய்து மாநாடுகளை நடத்தி முடிக்க திட்டமிடப்படுகிறது. இதற்கென கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பூத் கமிட்டிகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு கமிட்டியிலும் இளைஞரணி சார்பில் தலா 2 நபர்கள் இடம்பெற வேண்டுமென உதயநிதி அறிவுறுத்தியுள்ளார். அந்தவகையில் சுமார் 1.5 லட்சம் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள பூத் கமிட்டிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுவிட்டனர். இதர மாவட்டங்களிலும் இதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், ஒரு வட்டத்துக்கு தலா 5 துணை அமைப்பாளர்களையும் ஒரு ஒன்றிய கிளைக்கு தலா 2 துணை அமைப்பாளர்களையும் கூடுதலாக நியமிக்கவும் முடிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள சுமார் 5 லட்சம் பொறுப்பாளர்கள் களமிறக்கப்பட உள்ளனர். இந்த பணிகளை நவம்பர் மாதத்துக்குள் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here