கட்சியின் கீழ்மட்டத்தில் நடக்கும் உள்ளடிகள் அவ்வளவாக தலைமைக் கழகங்களை எட்டிவிடாது. அதனால் மாவட்டச் செயலாளர்கள், மாண்புமிகுக்களால் பாதிக்கப்பட்டுக் கிடப்பவர்கள் ‘என்னத்த சொல்ல… எங்க போய்ச் சொல்ல’ என்று மனக்குமுறலைக் கொட்டி பரிகாரம் தேட வழிதெரியாமல் உட்கார்ந்திருப்பார்கள். அப்படி இருப்பவர்களை ஆறுதல்படுத்துவதற்காகவே ‘கழக’ கட்சி தரப்பில் மாவட்ட வாரியாக, ‘உடன்பிறவா’ சகோதரர்களை அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார் தலைவர்.
இதுவரை சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளைச் சார்ந்த சகோக்களிடம் ஆராய்ச்சி மணி கட்டாத குறையாக ஆதங்கங்களைக் கேட்டு குறித்திருக்கிறாராம் தலைவர். ஆனாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை ஏதும் இல்லையாம். இதனிடையே, புகார் தெரிவிப்போர் பட்டியலில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அவர்கள் மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்பதை முன்னதாகவே ஃபைல் போட்டுக் கொடுத்துவிடுகிறார்களாம் மாவட்டப் புள்ளிகள்.
இதனால், மனக்குமுறலோடு வருபவர்கள் பேச ஆரம்பித்ததுமே, “உங்க மேலயும் இந்தப் பிரச்சினை எல்லாம் இருக்கே…” என்று பட்டியலை வாசித்து வாயடைக்க வைத்துவிடுகிறாராம் தலைவர். இதனால், குறைகளைச் சொல்ல வருபவர்கள் அதற்கு மேல் எதுவும் பேசமுடியாமல் மவுனித்துப் போகிறார்களாம். தலைவரே நம்மை அழைத்து குறைகளைக் கேட்கிறார் என ஆரம்பத்தில் ஆனந்தப்பட்ட உடன்பிறவா’ சகோதரர்கள் இப்போது இதை எல்லாம் கேள்விப்பட்டதும் நமக்கேன் வம்பு என அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.