மங்கிய புகழை மீட்க பாகவதர் தயாரித்த படம்!

0
20

பத்​திரிகையாளர் லட்சுமிகாந்தன், 1944-ம் ஆண்டு கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டார்கள், எம்.கே.தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும். முப்பது மாத சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த தியாகராஜ பாகவதர், தனது நெருங்கிய நண்பர்களையும் விருப்பமாகச் செல்லும் இடங்களையும் தவிர்த்துவிட்டு, கோயில்களுக்குச் செல்லத் தொடங்கினார். ஆன்மிக நாட்டம் அதிகமானது அவருக்கு.

தென்னிந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான அவர், இந்த வழக்கு விவகாரத்தால் மங்கிய தனது புகழை, அடுத்த படம் மூலம் உயிர்ப்பிக்க நினைத்தார். புனே சென்ற அவர், அங்கு அப்போது பிரபலமாக இருந்த பிரபாத் ஸ்டூடியோவில் ‘ராஜமுக்தி’ என்ற படத்தைத் தொடங்கினார். தனது நரேந்திரா பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்த அவர், தனது நண்பரும் இயக்குநருமான ராஜா சந்திரசேகரிடம் அதை இயக்கச் சொன்னார்.

பாகவதர் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் பானுமதி, வி.என்.ஜானகி, எம்.ஜி.சக்கரபாணி, செருகளத்தூர் சாமா, பி.எஸ்.வீரப்பா, சி.டி.ராஜகாந்தம் என பலர் நடித்தனர். எம்.ஜி.ஆர், மகேந்திர வர்மனாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். வி.என்.ஜானகியும் எம்.ஜி.ஆரும் சேர்ந்து நடித்த முதல் படம் இது. பி.யு.சின்னப்பாவின் ‘ரத்னகுமார்’ படத்துக்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பானுமதிக்கு இது 2-வது தமிழ்ப் படம். ஆனால் ‘ராஜமுக்தி’தான் முதலில் வெளியானது.

புனே-வில் ஒரு பங்களாவை லீசுக்கு எடுத்து நடிகர்கள் அனைவரையும் தங்க வைத்தார், பாகவதர். பிரபாத் ஸ்டூடியோவில் உள்ள டெக்னீஷியன்களையே படத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்.

எழுத்தாளர் புதுமைப்பித்தன் இதன் கதை, வசனத்தில் பங்குபெற்றார். பாபநாசம் சிவன் பாடல் வரிகளை எழுத, அப்போது பிரபலமாக இருந்த கர்னாடக இசைப் பாடகர்கள் ஆலத்தூர் சகோதரர்களில் ஒருவரான சுப்பிரமணியம் பாடல்களுக்கு இசை அமைத்தார். பின்னணி இசையை சி.ஆர். சுப்பாராமன் அமைத்தார். பாகவதர் படங்களில் பாடல்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். கிராமபோன் டிஸ்க்குகள் (பாடல்கள்) முதலிலேயே வெளியிடப்பட்டு விற்பனையில் சாதனைப் படைத்தன.

பாகவதருடன் எம்.எல்.வசந்தகுமாரி, பானுமதி பாடல்களைப் பாடினர். ‘குலக்கொடி தழைக்க…’, ‘உனையல்லால் ஒரு துரும்பசையுமோ’, ‘பூமியில் மானிட ஜென்மம்’, ‘நீ பள்ளி எழுந்தாலல்லது…’, ‘இங்கும் அங்கும் எங்கும் இன்பமே’, ‘மனம் நினைந்தேங்கினேனே’ உள்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

பாக்ஸ் ஆபீஸ் சாதனைப் படைத்த பாகவதரின் ‘ஹரிதாஸ் (1944)’ படத்துக்குப் பிறகு அவர் நடித்தப் படங்கள் ஏதும் வெளியாகாததால் இந்தப் படத்தை, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் பொருளாதாரச் சிக்கலால் படம் லேட். அதோடு பாகவதர் பற்றிய வதந்திகளும் அப்போது அதிகம் வெளியாயின. அவர் தனது குரலை இழந்துவிட்டார் என்றும் ‘பாகவதர் கிராப்’ பிரபலமான நேரத்தில், அவர் தலையை மொட்டையடித்து விட்டார் என்றும் கூறப்பட்டன.

1948-ம் ஆண்டு இதே தேதியில் (அக்.9) வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றியை பெறவில்லை. படத்தின் நீளம் அதிகம் என்றும் காமெடிக்கு பஞ்சம் என்றும் விமர்சிக்கப்பட்டன.

சிறையில் இருந்து அவர் வெளிவந்த பிறகு நடித்த, ராஜமுக்தி, அமரகவி (1952), சியாமளா (1952), புதுவாழ்வு (1957), சிவகாமி (1960) ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் அந்தப் படங்களின் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here