தொலைபேசியில் தொடர்புகொண்டு விஜய்க்கு ஆறுதல் கூறிய பழனிசாமி! – 2026 ஜனவரியில் கூட்டணி குறித்து உடன்பாடு?

0
112

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் கடந்த செப்.27-ம் தேதி கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்வம் தொடர்பாக விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். உயிரிழந்தோர் அனைவருக்கும் அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

இச்சம்பவத்தால் விஜய் மனமுடைந்து போய் உள்ளார். வெளியில் வருவதையும், கட்சி நிர்வாகிகளை சந்திப்பதையும் தவிர்த்து வருகிறார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் அறிவித்துள்ள நிலையில், அதையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து வழங்க முடியாமல் தவித்து வருகிறார் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

சென்னையில் தொடரப்பட்ட வழக்கில், விஜய் பிரச்சாரத்துக்கு செல்லும்போது இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விவகாரத்தில் வழக்கு பதியவும், பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி அஸ்ராகார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவையும் நீதிமன்றம் அமைத்துள்ளது. அக்குழுவும் விசாரணையை தொடங்கியுள்ளது. நெரிசல் மரணம் விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

விஜய் வெளியிட்ட வீடியோவில், “பல இடங்களில் பிரச்சாரம் செய்த நிலையில், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது” என கேள்வி எழுப்பி இருப்பதன் மூலம், மறைமுகமாக, திமுகவையும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் குற்றஞ்சாட்டியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நெரிசல் மரண சம்பவத்துக்கு அரசின் கவனக்குறைவே காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

41 பேர் மரணமடைந்த விவகாரத்தில் அண்மைக்கால நிகழ்வுகள், விஜயை குற்றவாளியாக ஆக்கிவிடும் வகையில் இருப்பதாகவும், விஜய் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், விரக்தியில் இருப்பதாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே விஜய்யிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியானது. இதனால் இவ்விரு கட்சிகளுடன் விஜய்யை தங்கள் கூட்டணிக்கு இழுக்க முயற்சிப்பதாக கூறப்பட்டது.

இந்த சூழலில் விஜய் தனியாக போட்டியிடுவது சிரமம், அனுபவம் வாய்ந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 2026 தேர்தலை சந்திப்பது நல்லது என, அவருக்கு நெருக்கமான சிலர் ஆலோசனை கூறியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, விஜய்யை கடந்த அக்.6-ம் தேதி மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்ததாகவும், கூட்டணிக்கு வருமாறு அழைத்ததாகவும், அதற்கு விஜய் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உரையாடலின்போது, ‘‘நம் இருவருக்கும் பொது எதிரி திமுக. அதை 2026 தேர்தலில் இணைந்து வீழ்த்துவோம் ’’ என்றும் பழனிசாமி தெரிவித்ததாக தெரிகிறது. கூட்டணித் தொடர்பான முடிவு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவு செய்துகொள்ளலாம் என்று இரு தரப்பும் முடிவு செய்திருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here