திரைப்பட ஒளிப்பதிவாளரும் எழுத்தாளருமான சி.ஜெ.ராஜ்குமார், ஒளிப்பதிவு துறையில் 13 நூல்களையும், 500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். நவீன ஒளிப்பதிவின் தொழில்நுட்பங்கள், கலை மற்றும் திரைப்படத்துறையைப் பற்றிய இவருடைய எழுத்துகள், உலகளாவிய அளவில் சினிமா மாணவர்களுக்கும் தொழில்முனைவர்களுக்கும் வழிகாட்டியாக உள்ளன. தற்போது, சினிமா ஃபாக்டரி அகாடமியின் டீனாக பணியாற்றி வருகிறார்.
ஒளி என்பது சினிமாவின் ஆன்மா. அது வெறும் வெளிச்சமல்ல; அது கதை சொல்லும் மொழி. ஒளி எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதே ஒளிப்பதிவின் பரிணாமப் பயணமாக மாறி, உணர்ச்சி, அர்த்தம் மற்றும் மாயையை உருவாக்குகிறது. இந்தப் பயணத்தின் மறக்க முடியாத உதாரணம், குரு தத் இயக்கிய ‘காகஸ் கே பூல்’ (1959). ஒளிப்பதிவாளர் வி.கே.மூர்த்தி இருண்ட படப்பிடிப்பு தளத்தில் ஒரே ஒரு திடமான ஒளிக்கதிரைப் பயன்படுத்தி சினிமா வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கும், காட்சியை உருவாக்கினார். வெறுமையான ஸ்டூடியோவில் குரு தத் தனியாக அமர்ந்திருக்கும் அந்த ஒளிக்கதிர் தனிமை, அழிந்துபோகும் புகழ், கலைத் தேடல் ஆகியவற்றைச் சின்னமாக வெளிப்படுத்தியது.
ஒரு ஒளிக்கதிர், உணர்ச்சியைப் பேச வைக்கும் சக்தியை, இந்தக் காட்சி நிரூபித்தது. அந்த காலத்திலேயே சத்யஜித் ரே படங்களில் சுப்ரதா மித்ரா, உலகுக்கு ‘பவுன்ஸ்ட் லைட்டிங்’ என்ற புதிய பார்வையை அறிமுகப் படுத்தினார். நேரடியாக ஒளி வீசாமல் பிரதிபலிப்பைப் பயன்படுத்தி மென்மையான ஒளியை உருவாக்கும் அவருடைய முறை, இயற்கை ஒளியின் உண்மையான உணர்வை, கேமரா முன் கொண்டு வந்தது. இது உலக ஒளிப்பதிவின் மொழியையே மாற்றிய முக்கியமான புதுமை.
இதை விட வேறுபட்ட, ஆனால் சமமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் பாலு மகேந்திரா. அவர் சாளரங்கள் வழியாக வரும் இயற்கை ஒளியை உள் தளங்களில் அழகாகப் பயன்படுத்தி இந்திய ஒளிப்பதிவை மாற்றினார். ‘மூன்றாம் பிறை’ போன்ற படங்களில் சாளர ஒளி கதாபாத்திரங்களின் உள்ளுணர்வை வெளிப்படுத்துகிறது. இயற்கை வெளிச்சமும் கவிதைபோல் மென்மையாகவும் நெருக்கமாகவும் இருக்க முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.பாலுமகேந்திரா சூரிய ஒளியின் கவிஞர் எனில் மாருதி ராவ், சந்திர ஒளியின் மாயவாதி.
அவரது இரவுக் காட்சிகள் இருளையும் கவிதையாக்கின. சந்திர ஒளி வெறும் நீல நிறப் பின்னணியாக இல்லாமல் அடுக்குகள், ஆழம், கனவுத் தன்மை கொண்ட காட்சிமொழியாக மாறியது. பிறகு வந்தார் பி.சி.ஸ்ரீராம். பாரம்பரிய ஒளி அமைப்பின் விதிகளை முறியடித்து, எதிர்பாராத பின்னொளி, உள்தளங்களுக்கு ஊடுருவும் ஒளி மற்றும் ‘ஃப்ளேர்’ களை கதையின் ஓட்டமாக மாற்றினார்.
வெளிச்சத்தை அவர், ஒரு கலகக்கார மொழியாக மாற்றி, காட்சிகளுக்கு உயிரூட்டினார். மது அம்பாட்டின் ‘அஞ்சலி’ அதற்குச் சிறந்த உதாரணம். “ஒளி பின்னணியில்உருவான தேவதை” எனக் கூறப்படும் அந்தக் குழந்தை பாத்திரம், லோ கீ லைட்டிங்கில் உருவானது. மென்மையான ஒளி, நிழல்கள் மற்றும் பின்புலத்தின் அமைதியுடன் அந்தக் கதாபாத்திரம் நம் நினைவில் நிலைத்து விடுகிறது.
இந்த ஒளி மாந்தர்கள், ஒளி என்பது வெறும் தொழில்நுட்பத் தேவை அல்ல, அது கதாபாத்திரம், உணர்ச்சி மற்றும் சூழல் என சினிமாவை வடிவமைக்கும் சக்தி என்பதை நமக்கு நினைவூட்டுகிறார்கள். ஒளி மூலம் உண்மை நிலையைப் பதிவு செய்வதற்காக அல்ல, அதை வடிவமைத்து கவிதையாக்குவதற்காகவே ஒளிப்பதிவாளர் செயற்படுகிறார். கலைஞர்களின் கைகளில் ஒளி, வெறும் வெளிச்சமல்ல ; அது சினிமாவாக மாறுகிறது.