நடிகையும் தடகள வீராங்கனையுமான சயாமி கெர், அயர்ன்மேன் டிரையத்லானின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியில், ‘மிர்ஸியா’, ‘மவுலி’, ‘சோக்ட்’, ‘அக்னி’, ‘ஜாத்’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர், சயாமி கெர். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள இவர், வெளிநாடுகளில் நடந்த ‘அயர்ன்மேன் டிரையத்லான் 70.3’ என்ற தடகளப் போட்டியை ஒரே வருடத்தில் 2 முறை முடித்த இந்திய நடிகை என்ற பெயரைப் பெற்றுள்ளார்.
இந்தக் கடினமானப் போட்டி, 70.3 மைல்களை (113 கி.மீ.) உள்ளடக்கியது. இதில், 1.9 கி.மீ நீச்சல், 90 கி.மீ சைக்கிள், 21.1 கி.மீ ஓட்டம் ஆகியவை அடங்கும். ஒரே நாளில் நடக்கும் இந்தப் போட்டியை, முதலில், 2024-ம் ஆண்டு செப்டம்பரில் ஜெர்மனியில் இவர் நிறைவு செய்திருந்தார். 2-வது முறையாக இப்போட்டியை கடந்த ஜூலை மாதம் முடித்தார். இதையடுத்து, அயர்ன்மேன் சர்வதேச கமிட்டியால் இந்திய பதிப்பின் முகமாக, அதாவது தூதராக சயாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி சயாமி கெர் கூறும்போது, “நவ.9 -ல் கோவாவில் நடைபெறும் ‘அயர்ன்மேன் இந்தியா’வின் முகமாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். ஒரு வருடத்துக்குள் 2 முறை ‘அயர்ன்மேன் டிரையத்லான் 70.3’ போட்டியை முடித்தது சாதனைகளுக்காக அல்ல; அது எனது சொந்த வரம்புகளை நானே மீறுவதைப் பற்றியது. இது வெறும் பந்தயம் மட்டுமல்ல, இது ஒரு மனநிலை, ஒரு வாழ்க்கை முறை. ஒரு நடிகையாகவோ அல்லது விளையாட்டிலோ எல்லைகளைத் தாண்டுவதை, எப்போதும் விரும்புகிறேன். எனது பயணம் அதிகமான இந்தியர்களை, குறிப்பாகப் பெண்களை, இதுபோன்ற விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சயாமி கெரைத் தவிர, இந்த டிரையத்லானில் பங்கேற்ற ஒரே இந்திய நடிகர் மிலிந்த் சோமன்.