கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவார பாலகர் சிலைகளுக்கும் 1999-ல் தங்க முலாம் பூசப்பட்டது. இந்த சூழலில் துவார பாலகர் சிலைகளின் பீடங்களை காணவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 17-ம் தேதி கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
தங்க முலாம் பூசப்பட்ட பீடத்தை தேடி கண்டுபிடிக்க ஐயப்பன் கோயில் தேவசம் போர்டு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து தேவசம் போர்டு நடத்திய விசாரணையில், தங்க முலாம் பூசப்பட்ட பீடம் மீட்கப்பட்டது. உயர் நீதிமன்ற விசாரணையில் துவார பாலகர் சிலைகளின் தங்க முலாம் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. மொத்தம் 4 கிலோ தங்கம் மாயமாகி இருக்கிறது.
இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கம் மாயமானது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே கேரள சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன் கூறும்போது, “ஐயப்பன் கோயிலில் இருந்து தங்கம் திருடப்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தை ஆளும் மார்க்சிஸ்ட் அரசும் தேவசம் போர்டும் மூடி மறைத்து வருகின்றன. தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போற்றியை இதுவரை கைது செய்யாதது ஏன்? இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். தேவசம் போர்டு அமைச்சர் வாசவன், தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் பதவி விலக வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். இந்த விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளி காரணமாக சட்டப்பேரவை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.