கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கைதிகள் விதிமுறைகளை மீறி வருவது தொடர்கதையாக உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட போது சசிகலா சீருடை அணியாமல், வெளியே ஷாப்பிங் சென்ற வீடியோ வெளியானது. கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, நடிகர் தர்ஷன் ஆகியோரும், ரவுடிகளும் சிறையில் சொகுசாக இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி சீனிவாஸ் சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை ஆப்பிள் மாலை அணிந்து, கேக் வெட்டி நண்பர்கள் புடைசூழ கொண்டாடியுள்ளார். மேலும் அவர் செல்போனில் நண்பர்களுடன் வீடியோ காலில் பேசுவது போன்ற வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக சிறைத்துறை ஏடிஜிபி பி.தயானந்தா, “இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.