சாட்சிகளை கலைக்க முற்பட்டால் எந்த நேரமும் செந்தில் பாலாஜியின் ஜாமீனை எங்களால் ரத்து செய்ய முடியும். அவர் அமைச்சராக விரும்பினால் நீதிமன்றத்தில் தனியாக மனுதாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணம் வசூலி்த்து மோ்சடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 2022 செப்டம்பரில் அளித்த தீர்ப்பில், ‘செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யாதது குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவி்த்திருந் தது. மேலும், அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக பதவியில் இல்லை என்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குவதாக தெரிவித்திருந்தனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தனக்கு எதிரான கடுமையான கருத்துக்களை தீர்ப்பில் இருந்து நீக்கும்படி கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.எம்.பக்க்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.
அப்போது நீதிபதிகள், இதுதொடர்பாக தீர்ப்பு அளித்த நீதிபதி அபய்எஸ்.ஓஹா ஓய்வு பெற்றபிறகு இந்த மனுவை தாக்கல் செய்தது ஏன் என்றும், அமைச்சர் பதவியா, ஜாமீனா என முடிவு செய்து கொள்ளுங்கள் என நீதிபதிகள் கேட்டு விட்டுத்தானே ஜாமீன் வழங் கினர்? என கேள்வி எழுப்பினர்.
அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா. ‘‘இந்த மனு திட்டமிட்டு, தீர்ப்பளித்த நீதிபதி ஓய்வு பெற்றதும் காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என்றார். செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், ‘‘ செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் தீர்ப்பில் முழுமையாக இடம்பெறவில்லை.
ஆனால் அவர்கள் உத்தரவில் தெரிவி்த்துள்ள கருத்துக்கள் மீண்டும் அமைச்சராக பதவியேற்றால் சாட்சிகளை கலைக்க நேரிடும் என்றும், ஒருவேளை சாட்சிகள் கலைக்கப்பட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கையாக தெரிவித்துள்ளனர். அதைத்தான் நீக்க வேண்டும் எனக்கோருகிறோம். மனுதாரர் சாட்சியங்களை கலைக்க முற்பட்டால் நீங்களே ஜாமீனை ரத்து செய்யலாம்’’ என்றார்.
ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்த வித்யாகுமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “ சந்தர்ப்ப சூழலைக் கருத்தில் கொண்டே நிபந்தனைகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதில் எந்த தவறும் இல்லை’’ என்றார். அதையடுத்து நீதிபதிகள், சாட்சிகளை கலைக்க முற்படுவதாக தெரிந்தால் எந்த நேரமும் செந்தில் பாலாஜியின் ஜாமீனை எங்களால் ரத்து செய்ய முடியும்.
அதேநேரம் அவர் அமைச்சராகக்கூடாது என உச்ச நீதிமன்றமும் எந்த தடையும் விதிக்கவில்லை. நீண்ட சிறைவாசத்தை அனுபவித்து விட்டார் என்ற காரணத்துக்காகவும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உத்தரவாதத்தை கருத்தில் கொண்டுமே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
வழக்கு விசாரணை முடிந்து அவர் விடுவிக்கப்படும் வரை அமைச்சராக பதவியில் தொடர விரும்பினால் அதுதொடர்பாக அனுமதி கோரி தனியாக மனு தாக்கல் செய்யுங்கள்” என்றனர் என்றனர். அப்போது மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், ‘‘உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய ஒருநாள் இடைவெளியில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றதை நீதிபதி ஓஹா கடுமையாக ஆட்சேபித்தார். பல அமைச்சர்களுக்கான எதிரான வழக்குகளில் விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. எத்தனைபேர் ராஜினாமா செய்துள்ளனர்.
இவர் மட்டும் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார். செந்தில்பாலாஜி தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தீர்ப்பில் தெரிவித்த கருத்துக்களை நீக்க வேண்டுமென்றால் இந்த அமர்வில் தீர்ப்பளித்த நீதிபதிகள் இடம்பெற வேண்டும்.வழக்கில் உத்தரவு தெளிவாக உள்ளது. அதில்எந்த விளக்கமும் தேவையில்லை” என்றனர். அதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் இந்த மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதற்கு அனுமதியளித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
டெல்லிக்கு ஏன் மாற்றக்கூடாது? – செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி ஒய்.பாலாஜி என்பவர் தாக்கல் செய்திருந்த மற்றொரு மனுவை விசாரித்த இதே நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை ஏன் டெல்லி்க்கு மாற்றக்கூடாது என கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசும், செந்தில் பாலாஜியும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.12-க்கு தள்ளி வைத்துள்ளனர்.