இந்தியா மற்றும் பூடானுக்கு இடையில் 89 கிலோமீட்டர் தூரத்துக்கு கோக்ரஜார்-கெலெபு (அசாம்) மற்றும் பனார்ஹட்-சம்ட்சே (மேற்கு வங்கம்) ஆகிய இரண்டு புதிய ரயில் இணைப்புகள் ரூ.4,033 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.
மத்திய அமைச்சர் அஸ்வினிவைஷ்ணவ் உடன் செய்தியாளர்களை நேற்று சந்தித்த வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி இதுகுறித்து கூறியதாவது: பனார்ஹட்-சாம்ட்சே மற்றும் கோக்ரஜார்- கெலெபு இடையே எல்லை தாண்டிய இரண்டு ரயில் வழித்தட இணைப்புகளை நிறுவ இந்தியா மற்றும் பூடான் அரசுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இது பூடானுடனான முதல் ரயில் இணைப்புத் திட்டமாகும். பூடான் வெளியுறவுச் செயலாளரின் வருகையின் போது புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதியாகும்.
இப்பகுதியில் உள்ள மக்க ளுக்கு சிறந்த பொருளாதார மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பூடான் அரசாங்கத் தால் சாம்ட்சே ஒரு தொழில்துறை நகரமாக உருவாக்கப்பட்டு வருகிறது. பூடான் மன்னர் மற்றும் பிரதமர் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி பூடானுக்கு சென்றபோது அவருக்கு அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ஆர்டர் ஆஃப் தி ட்ருக் யால்போ வழங்கப்பட்டது.
கடந்த 2024 முதல் 2029-வரையிலான பூடானின் 13-வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு இந்தியா ரூ.10,000 கோடி வழங்க உறுதி அளித்துள்ளது. இது, திட்ட அளவிலான உதவி, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், பொருளாதார ஊக்கத் திட்டம், திட்ட மானியம் ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும், 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தை விட 13-வது ஐந்தாண்டு திட்டத்தில் வழங்கப்படும் உதவி 100 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு வெளியுறவு செயலர் மிஸ்ரி தெரிவித்தார்.