தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட பழனிசாமிதான், கரூர் சம்பவத்தில் துரிதமாக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் மீது பழிபோடுகிறார் என்று அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்ட அறிக்கை: கரூர் துயரச் சம்பவத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அதிலும் அரசியல் செய்து வருகிறார். காவல்துறையின் கட்டுப்பாடுகள் எதையும் தவெக பிரச்சாரத்தில் கடைப்பிடிக்கவில்லை. ‘ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநரே நோயாளியாக செல்வார்’ என பழனிசாமி சொன்னதன் விளைவே தவெக கூட்டத்திலும் ஆம்புலன்ஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அனுமதி தராவிட்டால் அதிலும் அரசியல் செய்வது, அனுமதி அளித்தால் அந்த நிபந்தனைகளை மீறுவது, நிபந்தனைகளை மீறும் ரசிகர்களை ஊக்குவிப்பது என தவெக மோசமான அரசியலுக்கு மாறி வருகிறது. அதை அதிமுக ஆதரிக்கிறது. பழனிசாமி பொறுப்பற்ற முறையில் மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்பி, சுய அரசியல் ஆதாயம் தேடுவது அரசியல் அநாகரிகம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட அறிக்கை: கரூர் துயரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவை பார்த்துவிட்டுக் கதறியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. கரூர் சம்பவத்துக்கு ஆணையம் அமைத்ததை அவர் கண்துடைப்பு என்கிறார். இதே நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தைதான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது அமைத்தவர் அன்றைய முதல்வர் பழனிசாமி.
ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தவரும் பழனிசாமிதான். ஜெயலலிதாவின் மரணத்தை விசாரித்ததுகூட கண் துடைப்புதானா, அமைச்சர் ஒருவர் அழுவது போல நடிக்க தெரியாமல் மாட்டிக்கொண்டார் எனக் கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கி 2014-ல் நீதிபதி குன்கா தீர்ப்பளித்ததால், பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை கண்ணீரோடு பதவியேற்றது. அப்போது அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையை பற்றி பேசுவது? இவ்வாறு கூறப்பட்டுள்ளது.