பானுமதி ராமகிருஷ்ணா மிகச்சிறந்த நடிகையாக, இயக்குநராக, பாடகியாக, வசனகர்த்தாவாக, படத்தயாரிப்பாளராக பன்முக ஆற்றல் கொண்ட ஆளுமையாக, தென்னிந்திய திரை உலகில் முத்திரை பதித்தவர்.
ஆனாலும் அவர் மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் என்பது வெகுசிலரே அறிந்த செய்தி. நடிப்பதை விட எழுதுவதுதான் அவருக்குப் பிடித்தமானது. இதை அவரே சொல்லி இருக்கிறார். “படப்பிடிப்பு இடைவேளைகளில் எனக்கும் என் மாமியாருக்கும் நடந்த வேடிக்கையான சின்னச் சின்ன சண்டைகளை பேனா சித்திரங்களாக டைரி பூராவும் எழுதி வைத்திருந்தேன்.
இதைக் கவிராஜூ என்கிற எழுத்தாளர் பார்த்துவிட்டு உனக்கு நன்றாக கதை எழுத வருகிறதே, தொடர்ந்து எழுது என்று உற்சாகப்படுத்தினார். அவர் தந்த உற்சாகத்தில் நான் எழுதிய “மரச் சொம்பு” என்ற கதை பிரசுரமாயிற்று.
‘மாமியார் மருமகள்’ சண்டை என்பது எல்லா இடங்களிலும் நடப்பதுதான். நான் அந்தச் சண்டையிலும் ஒரு நகைச்சுவையைப் புகுத்தி என் மாமியாரை சிரிக்க வைத்து விடுவேன். இதுதான் மாமியார் கதைகள் பிறந்த கதை”.
இவர் எழுதிய மாமியார் கதைகள் “அத்தகாரு கதலு” என்று தெலுங்கில் புத்தகமாக வெளிவந்தபோது அதற்கு ஆந்திர பிரதேச சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது. இக்கதைகள் தமிழில் பிரபல வார இதழில் “மாமியார் கதைகள்” என்ற பெயரில் வெளிவந்தபோது அவருக்கென்று ஒரு வாசகர் கூட்டம் உருவாகிவிட்டது. இதை 2 பாகங்களாக வானதி பதிப்பகம் வெளியிட்டது. நீண்ட காலமாக இந்த கதைகளைத் தேடிக் கொண்டிருந்த வாசகர்களுக்கு விருந்தாக மறுபடியும் “மாமியார் கதைகள்” இந்திரா பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது.
பானுமதியிடம் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உண்டு. அவருடைய பேச்சிலும் எழுத்திலும் அது வெளிப்படும்.
பானுமதி கூறுகிறார்:“எனக்குத் தரப்படும் ஸ்கிரிப்ட் சப்பென்று இருந்தால் பிடிக்காது. அதில் நகைச்சுவை வருமாறு எழுதிப் பேசி விடுவேன். இதை இயக்குநர்களும் அனுமதித்தார்கள்.வாழ்க்கையில் நான் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள், ஏனோ தெரியவில்லை சீரியஸாகத்தான் இருக்கிறார்கள். என்னவோ கப்பல் கவிழ்ந்து விட்டது போல் படுமோசமாக காட்சியளிப்பவர்களும் உண்டு. என் எழுத்தால் இது போன்றவர்களைச் சீண்டி சிரிக்க வைப்பது எனக்குப் பிடிக்கும்.
பானுமதியின் பேச்சிலும் எழுத்திலும் ஒரு தத்துவச்சரடு ஓடும். இதழ் ஒன்றில் ‘எனக்குள்ளே நான்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய தொடரில் அந்த நான் என்பது ஒரு குழந்தையைத்தான் குறிப்பிடுகிறது. இந்த உலகத்தையே நான் ஒரு குழந்தையின் பார்வையோடு தான் பார்க்கிறேன் என்பார். “எல்லாமே வேடிக்கையாக இருக்கிறது. இந்த மனிதர்கள், இவர்களின் சாதனைகள், வெற்றி தோல்விகள், புகழ், பெருமை, விருது, நடிப்பு எல்லாமே வேடிக்கையாக இருக்கிறது. இவற்றை எல்லாம் பார்த்து எனக்குள்ளே உள்ள குழந்தை விழுந்து விழுந்து சிரிக்கிறது”.
தொண்ணூறுகளின் இறுதியில் அவரை பத்திரிகை நேர்காணல் நிமித்தம் சந்தித்தபோது, அவரைப் பேச விடாமல் பலரும் தலை போகிற பிரச்சினைகளோடு அவரை அணுகினாலும் அதை தனது நகைச்சுவை பேச்சால் திசை திருப்பி விடுவார், அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை.
“சாந்தமு லேகா சவுக்கியமு லேது” என்பது அவர் அடிக்கடி சொல்லும் வாக்கியம். அவர் புகழின் உச்சியில் இருந்த நேரம், பி.யு.சி. தேர்வு எழுத விசாகப்பட்டினம் சென்றபோது அவருடைய நாத்தனார் மகள் “அத்தை இப்ப படிக்கணும்னு என்ன அவசியம்?’’ என்று கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் பெண்களுக்கான வழிகாட்டும் வாசகம். “பெண்ணே! நடிப்பதால் கிடைக்கும் புகழைவிட படிப்பதால் கிடைக்கும் மரியாதை தான் பெண்ணுக்கு சாஸ்வதம். நான் இதுவரை படிக்காமல் விட்டு விட்டேன். அதற்காகத்தான் இப்போது படிக்கிறேன்”
பானுமதி ராமகிருஷ்ணா நூற்றாண்டை ஒட்டி அவர் மகன் டாக்டர் பரணி, சில தினங்களுக்கு முன்பு (11.09.2025) டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தில் (இசைப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சௌமியா முன்னிலையில்) ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் வரலாற்று ஆய்வாளர் வி.ஸ்ரீராம் சிறப்புரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து இந்திரா பதிப்பகம் “மாமியார் கதைகள்” என்ற நூலினை தற்போது வெளியிட்டு இருப்பது பானுமதி நினைவுக்கு பொருத்தமான அஞ்சலி. வாசகர்களின் ரசனைக்கு விருந்து.