சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்: துப்பாக்கிச் சண்டையில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

0
14

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பிஜப்பூரில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் இரண்டு மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். துப்பாக்கிகள், பிற ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. மேலும், துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை), சத்தீஸ்கரின் கரியாபந்தில் பாதுகாப்புப் படையினர் 10 மாவோயிஸ்ட்களை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தில் மூத்த மாவோயிஸ்ட் தலைவரான மோடம் பால கிருஷ்ணா கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பாலண்ணா, ராமச்சந்தர் மற்றும் பாஸ்கர் என்ற பெயர்களில் அழைக்கப்படும் பாலகிருஷ்ணா. ஒடிசா மாநிலக் குழுவின் செயலாளராகவும், மாவோயிஸ்ட் மத்தியக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். அவர் 1983 இல் மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார்.

மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ளனர். அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் நாட்டிலிருந்து மாவோயிசத்தை ஒழிக்க மத்திய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஜூன் 23 அன்று வெளியிடப்பட்ட மாவோயிஸ்ட் மத்தியக் குழு ஆவணத்தில், கடந்த ஆண்டு 357 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. மாவோயிஸ்ட் தலைவர் நம்பலா கேசவ ராவ் எனப்படும் பசவராஜு மே 20 அன்று கொல்லப்பட்டார். இது மாவோயிஸ்டுகளுக்கான பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here