மதராஸி: திரை விமர்சனம்

0
62

தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கொண்டு வர, வட மாநிலத்தைச் சேர்ந்த விராட் (வித்யுத் ஜம்வால்), சிராக் (சபீர் கல்லரக்கல்) தலைமையில் ஒரு கூட்டம் திட்டமிடுகிறது. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பிரேம் (பிஜூ மேனன்), தலைமையில் ஒரு குழு, அதைத் தடுக்க முயற்சிக்கிறது. இதில் காதல் பிரச்சினையால் தற்கொலைக்கு முயலும் ரகு (சிவகார்த்திகேயன்) என்ஐஏ வட்டத்துக்குள் வருகிறார். அவருடைய உயிரை பணயம் வைத்து துப்பாக்கிக் கடத்தல் கும்பலை அழிக்க, என்ஐஏ திட்டமிடுகிறது. ஆனால், ஒரு கட்டத்தில் ரகுவின் காதலி மாலதி (ருக்மணி வசந்த்) பணயமாகி விடுகிறார். ரகு, காதலியை மீட்க என்ன செய்கிறார்? துப்பாக்கிக் கடத்தும் கும்பலை அழித்தார்களா, இல்லையா என்பது கதை.

ஏ.ஆர்.முருகதாஸ், 5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் இயக்கியிருக்கும் படம் இது. தனது படங்களில் வேகமான திரைக்கதையால், ரசிகர்களைக் கட்டிப்போடும் முருகதாஸ், இதிலும் அப்படியே செய்திருக்கிறார். துப்பாக்கிக் கலாச்சாரத்தைப் புகுத்தி ரத்தக் களரியாக்க நினைக்கும் கும்பலுக்கும், யார் ரத்தம் சிந்தினாலும் ஓடிச் சென்று உதவும் தன்மையுள்ள நாயகனுக்குமான இரண்டே முக்கால் மணி நேர கதையை விறுவிறுப்புக் குறையாமல் இயக்கியிருக்கிறார்.

நாயகனை மனப்பிறழ்வு கதாபாத்திரமாக்கி, அவரையும் காதலையும் மையப் படுத்தி ஆக்‌ஷன் படமாக எடுத்திருப்பது ரசிக்க வைக்கிறது. முதல் பாதி துப்பாக்கிக் கும்பல் வருகை, நாயகனின் சேட்டைகள், காதல், சற்று நகைச்சுவை என மெதுவாக நகர்கிறது. நாயகன், என்ஐஏ வட்டத்துக்குள் வந்த பிறகு சூடுபிடிக்கிறது. அதைச் சரியாக ‘கனெக்ட்’ செய்து படமாக்கியிருக்கும் விதம் முதல் பாதியைத் தொய்வில்லாமல் ஆக்கிவிடுகிறது.

இரண்டாம் பாதியில் அது அப்படியே ஆக்‌ஷனுக்கு மாறுகிறது. கடத்தல், துரத்தல், ஆக்‌ஷன் என படம் ஸ்பீடு பிரேக் இல்லாமல் வேகம் பிடிக்கிறது. துப்பாக்கிகள் கடத்தும் வில்லன் கும்பலைவிட, என்ஐஏவை பலவீனமாகக் காட்டியிருப்பதும், அதன் தலைமையகத்திலேயே புகுந்து குண்டுகள் வெடிக்க வைத்து அதகளம் செய்வதும் அதீத கற்பனை. துப்பாக்கியை, தீபாவளித் துப்பாக்கி போல விநியோகம் செய்வதும், அதன் பின்னணியில் உள்ள பலம் பொருந்திய சிண்டிகேட், யாருக்கும் தெரியாமல் இருப்பதுமான லாஜிக் மீறல்களுக்கும் படத்தில் பஞ்சமில்லை. அதை சமன் செய்வதற்கும் காட்சிகளை இயக்குநர் யோசிக்கவில்லை. ஆனால், ஆக்‌ஷன் போரடிக்கும்போது சென்டிமென்ட் கைகொடுப்பது போல படமாக்கியிருப்பது இயக்குநரின் அனுபவத்தைக் காட்டுகிறது. சில காட்சிகளை யூகிக்க முடிவதும், இயக்குநரின் முந்தைய படங்களின் சாயல்கள் தெரிவதையும் தவிர்க்க முடியவில்லை.

நாயகன் சிவகார்த்திகேயன், மனப்பிறழ்வு, காதல், ஆக்‌ஷன் என நடிப்பில் ‘வெரைட்டி’ காட்டியிருக்கிறார். மனப்பிறழ்வு வெளிப்படும் போது அவருடைய நடிப்பு இன்னும் வேகமெடுக்கிறது. நாயகி ருக்மணி வசந்த், தன்னுடைய தேர்வுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். நடிப்பிலும் குறைவைக்கவில்லை. படத்தை வேகமாக நகர்த்திச் செல்வதில் என்ஐஏ அதிகாரியாக வரும் பிஜூ மேனன் உதவியிருக்கிறார். வித்யுத் ஜம்வால், சபீர் கல்லரக்கல் இணையின் வில்லத்தனமும் உடல்மொழியும் ரசிக்க வைக்கின்றன. விக்ராந்த், தலைவாசல் விஜய், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட துணை பாத்திரங்களும் பங்களிப்பை வழங்கி இருக்கின்றன.

ஆக்‌ஷன் படத்துக்கு ஏற்ற பின்னணி இசையை வழங்கியிருக்கிறார், இசை அமைப்பாளர் அனிருத். ரசாயன தொழிற்சாலை, துறைமுகத்தில் நடக்கும் சண்டைக் காட்சிகளில் சண்டைப் பயிற்சியாளர்கள் கெவின்குமார், திலீப் சுப்பராயனின் உழைப்பு தெரிகிறது. சுதீப் எலமனின் ஒளிப்பதிவு படத்துக்கு பக்கப்பலம். படத்தொகுப்பாளர் கர் பிரசாத், சில காட்சிகளைக் கத்தரித்து, படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here