ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு லண்டன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

0
47

ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஒரு வார பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து சென்றுள்ளார். கடந்த ஆக.30-ம் தேதி முதல்வர் ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் சென்றனர். ஜெர்மனியில் அமைச்சர் டிஆர்பி.ராஜா மற்றும் அங்குள்ள தூதரக அதிகாரிகள், தமிழர் குடும்பத்தினர் முதல்வரை வரவேற்றனர். தொடர்ந்து, தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அங்குள்ள தமிழர்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார்.

மேலும், ‘டிஎன் ரைசிங் ஜெர்மனி’ என்ற பெயரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.7,020 கோடி மதிப்பில் 26 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, கடந்த 2-ம் தேதி ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து சென்றார். லண்டன் விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்கிடையில் ஜெர்மனி பயணம் மற்றும் இங்கிலாந்து சென்றடைந்தது குறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

முதல் பதிவில் ‘‘தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்துக்கு ஐரோப்பிய பயணம் துணை நிற்கும். தமிழ் உறவுகள் அளித்த அன்பும், ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்துள்ள ஊக்கத்துடன் இங்கிலாந்து வந்தடைந்திருக்கிறேன். இந்தப் பயண அனுபவங்களை உடன் பிறப்புகளுடன் பகிர்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில் ‘‘இங்கிலாந்தில் கால் பதித்தேன். தொலைதூரக் கரைகளை கடந்து சென்றும், வீட்டில் இருப்பது போன்ற உணர்வை அளித்தது எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு. அங்குள்ளவர்களால் அன்புடனும், பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here