பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரம் ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு: விவசாயிகள் சங்கம் மனு

0
131

பரந்தூர் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள காலி ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பகுதியில் 5 ஆயிரத்து 747 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், விமான நிலையம் அமைக்க ஏகனாபுரத்தில் உள்ள காலி ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, காலி ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் கமலக்கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், விமான நிலையம் அமைக்க கையகப்படுத்த உள்ள 5,747 ஏக்கர் பரப்பில், 26.54 சதவீதம் நீர்நிலைகள் என்றும், ஏகனாபுரம் மக்கள் தங்கள் பாசன வசதிக்காக காலி ஏரியை மட்டும் நம்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வருவாய் துறை உத்தரவின்படி, நீர்நிலைகளை, விவசாயம் சாராத பயன்பாட்டுக்காக மறுவகைப்படுத்த முடியாது எனவும், ஏரியை சேதப்படுத்துவது என்பது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நியாயமற்ற செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏகனாபுரம், காலி ஏரியை விவசாயம் சாராத பணிகளுக்காகவோ, வர்த்தக பயன்பாட்டுக்காகவோ வகைமாற்றம் செய்யக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி முகமது சபிக் முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here