விமல் நடிக்கும், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.
அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், ஃபேமிலி காமெடி எண்டர்டெய்னராக உருவாகும் புதிய படத்தில் நடிகர் விமல் நாயகனாக நடிக்கிறார்.
சமீபத்தில் காரைக்குடியில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், 45 நாட்களில் ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடித்துள்ளது படக்குழு. மலையாளத் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற ‘ககனச்சாரி’, ‘பொன்மேன’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் நிறுவனம், இந்த படம் மூலம், தமிழ் திரையுலகில் கால்பதித்துள்ளது. இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தில் விமல், முல்லை அரசி, சேத்தன், சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் .
எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். திரைக்கதையை சுதி கிருஷ்ணா எழுதியுள்ளார். ‘பார்க்கிங்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரான்சிஸ் நெல்சன் சேவியர் மற்றும் மருது பெரியசாமி வசனம் எழுதியுள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிகட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது படக்குழு. விரைவில் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.














