சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் நேரில் ஆஜரானதால் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவு வாபஸ் 

0
112

வழக்கு விசாரணைக்கு ஆஜராகி சாட்சி சொல்லாததால் சிஎம்டிஏ உறுப்பினர் செயலரைக் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், விசாரணைக்கு அவர் நேரில் ஆஜரானதால் கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவை நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ரத்தினசபாபதி என்பவர், தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக சென்னை 19-வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பான ஆவணங்கள் குறித்து சாட்சியம் அளிக்க வேண்டுமென நீதிமன்றம் சம்மன் பிறப்பித்திருந்தது. ஆனால் இந்த சம்மனை சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் வாங்க மறுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து சிஎம்டிஏ உறுப்பினர் செயலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஜூலை 18 அன்று ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ராஜ்குமார் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிஎம்டிஏ உறுப்பினர் செயலரான ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் நேரில் ஆஜரானார்.

அவரது சார்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முக மது ஜின்னா, தாங்கள் வேண்டுமென்ற நீதிமன்றஉத்தரவை மீறவில்லை என்றும், நீதிமன்றம் பிறப்பித்த சம்மன் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் கூறி சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார்.

அத்துடன் சிஎம்டிஏ உறுப்பினர் செயலரைக் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் எனவும் கோரினார். அதையேற்ற நீதிபதி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற்று விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here