மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு: ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழு

0
151

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விசாரணை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை மாநகராட்சி 83-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரவி, உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பு முறைகேட்டால் ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு இருப்பதால், வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘முறைகேடு தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, பலரை கைது செய்துள்ளனர். மாநகராட்சி பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வரி விதிப்பு முறைகேடு நடக்கிறது. இதில் சென்னை மாநகராட்சியை, மதுரை முந்தியுள்ளது. முறைகேடு தொடர்பாக ஆணையரே புகார் அளித்துள்ளார். அவர் 2024 செப். 16-ம் தேதி புகார் கொடுத்துள்ளார். 7 மாதங்கள் தாமதமாக, கடந்த ஜூன் 17-ம் தேதிதான் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, நியாயமாக விசாரணை நடத்தி, முழு உண்மையை வெளிக்கொணர வேண்டும். முறைகேட்டில் தொடர்புடைய அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும். எனவே, ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு குழு அமைத்து விசாரணையை தொடரலாம்.

மனுதாரர் கோருவதுபோல, எல்லா வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற முடியாது. பணிச்சுமையால் விசாரணை முடிவதற்கு பல ஆண்டுகள் ஆகும். எல்லா அதிகாரிகளையும் சந்தேகப்படுவது சரியல்ல.

அதேபோல, சிபிசிஐடி விசாரணையும் தேவையில்லை. இந்த வழக்கை விசாரிக்க தென் மண்டல ஐ.ஜி. மற்றும் மதுரை மாநகர் காவல் ஆணையர் ஆகியோர், மூத்த, நேர்மையான ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு குழுவை அமைத்து, விசாரணையை தொடர வேண்டும்.

சிறப்பு குழு தனது அறிக்கையை ஜூலை 25-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here