மறைந்த நடிகை சரோஜாதேவியின் (87) உடல் சொந்த ஊரில் நேற்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை சரோஜாதேவி, பெங்களூருவில் நேற்று முன்தினம் காலமானார்.
அவரது உடலுக்கு கர்நாடகமுதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார், கன்னட முன்னணி நடிகர்கள் சிவராஜ்
குமார், உபேந்திரா, கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பெங்களூரு எம்ஜிஆர் மன்ற தலைவர் சி.எஸ்.குமார் தலைமையில் ஏராளமான ரசிகர்களும், ஆயிரக்கணக்கான கன்னட ரசிகர்களும் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து சரோஜாதேவியின் உடல் அவரது சொந்த ஊரான சென்னபட்ணாவை அடுத்துள்ள தஷாவராவுக்கு வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுக அவரது ரசிகர்களும் கிராம மக்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் சரோஜாதேவியின் உடல் தஷாவரா கிராமத்தில் உள்ள கொடிஹள்ளி தோட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
சரோஜாதேவியின் குடும்பத்தினர் ஒக்கலிக சமூக சம்பிரதாயப்படி இறுதி சடங்குகளை மேற்கொண்டனர். பின்னர் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அரசு சார்பில் மலர்வளையம் வைத்து வணங்கினார். இதையடுத்து முழு அரசு மரியாதையுடன், போலீஸாரின் அணிவகுப்புடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க சரோஜாதேவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவர் புதைக்கப்பட்ட இடத்தில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.
            













