ராஜஸ்தானில் வங்கிப் பணியில் ஓய்வுபெற்ற 71 வயது முதியவர் சிஏ தேர்வில் வெற்றி

0
134

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டம் சங்காரியா நகரைச் சேர்ந்தவர் தாராசந்த் அகர்வால் (71). இவருடன் பிறந்தவர்கள் 8 பேர். இதில் 4-வதாக பிறந்த அகர்வால் ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் அன்ட் ஜெய்ப்பூர் வங்கியில் (இப்போது எஸ்பிஐ) துணைப் பொது மேலாளராக பணிபுரிந்துள்ளார். 38 ஆண்டு பணிக் காலத்துக்குப் பிறகு கடந்த 2014-ல் ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மனைவி உயிரிழந்ததால் அகர்வால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் அவருடைய பிள்ளைகள் ஆலோசனையின் பேரில் பகவத் கீதை உள்ளிட்ட நூல்களை படிக்கத் தொடங்கி உள்ளார். பின்னர், பட்டயக் கணக்காளர் (சிஏ) தேர்வை எழுதுமாறு அவருடைய பேத்தி கூறியுள்ளார். இதன்படி 2021-ம் ஆண்டு சிஏ தேர்வுக்காக பதிவு செய்துள்ளார்.

2022-ம் ஆண்டு மே மாதம் பவுண்டேஷன் தேர்விலும் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இன்டர்மீடியட் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் இறுதித் தேர்வு எழுதிய அவர் தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து கடந்த மே மாதம் மீண்டும் தேர்வு எழுதிய அவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தோள்பட்டை வலிக்கு நடுவிலும் தினமும் 10 மணி நேரம் படித்து 71 வயதில் சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து அகர்வால் கூறும்போது, “எந்த வேலையைச் செய்தாலும் மன உறுதியுடன் செய்வேன். இதுதான் பகவத் கீதை எனக்கு கற்றுக் கொடுத்தது’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here