ஜாகுவார் விமான விபத்தில் 2 விமானிகள் உயிரிழப்பு: விசாரணைக்கு ஐஏஎப் உத்தரவு

0
172

ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டம் சூரத்கர் நகரில் இந்திய விமானப் படை தளம் உள்ளது. இங்கிருந்து ஜாகுவார் போர் விமானம் நேற்று முன்தினம் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. இந்த விமானம் சுருமாவட்டம், பனோடா கிராமத்துக்கு அருகில் திடீரென வயலில் விழுந்து நொறுங்கியது. இதில் விமான பாகங்கள் தீப்பற்றி எரிந்ததில் லோகேந்திர சிங் சிந்து (31), ரிஷி ராஜ் சிங் (23) ஆகிய இரு விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இவர்களில் லோகேந்திர சிங், ஹரியானாவின் ரோத்தக் நகரையும் ரிஷி ராஜ் சிங், ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். விபத்தில் இறந்த விமானிகளின் குடும்பத்தினருக்கு இந்திய விமானப் படை (ஐஏஎப்) ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு விபத்துக்குள்ளான மூன்றாவது ஜாகுவார் விமானம் இதுவாகும். ஐஏஎப் பயன்படுத்தும் ஜாகுவார் போர் விமானம் பழமையானது. பயன்பாட்டுக்காக அதுபல ஆண்டுகளாக தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வந்தது. விமானப் படையின் 6 படைப்பிரிவுகளில் இதுபோன்று சுமார் 120 விமானங்கள் உள்ளன. இந்த விமானங்களை ஐஏஎப் படிப்படியாக நிறுத்தத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here