சென்னை மாநகராட்சி மன்றத் துக்கான 2 மாற்றுத் திறனாளி உறுப்பினர் பதவிகளுக்கு ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளால் ஒலிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து சட்டமாக்கியுள்ளார்.
ஆண், பெண் தலா ஒருவர் அதன்படி சென்னை மாநகராட்சி மன்றத்துக்கு மாற்றுத் திறனாளி உறுப்பினராக நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநகராட்சியில் நியமனம் செய்யப்பட உள்ள 2 மாற்றுத் திறனாளி நபர்களில், தலா ஒரு ஆண் மற்றும் பெண் இடம்பெறுவர்.
இவர்களை நியமனம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 1 முதல் 17-ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாநகராட்சி எல்லைக்குள் வசித்துவரும் தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து மாநகராட்சி ஆணையரிடம் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ ஜூலை 17-ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.