ஏமாற்றிய காதலனை பழிவாங்குவதற்காக அவரது பெயரில் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்தவர் ரேனி ஜோஷில்டா.
இவர் பன்னாட்டு நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் திவிஜ் பிரபாகர் என்பவரைக் காதலித்து வந்தார். ஆனால் திவிஜ் பிரபாகர், இவரது காதலை ஏற்காமல் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜோஷில்டா, தனது காதலரை பழிவாங்க முடிவு செய்தார். ஐடி இன்ஜினீயரான இவர் போலியான இமெயில் ஐடிகளை உருவாக்கி, விபிஎன் சர்வர், டார்க் வெப் சர்வர்கள் மூலம் குஜராத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டலை காதலர் திவிஜ் பிரபாகர் பெயரில் அனுப்பியுள்ளார்.
மேலும் நாட்டின் 12 மாநிலங்களில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டலை திவிஜ் பிரபாகர் பெயரில் ஜோஷில்டா அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விசாரணையில் ஜோஷில்டாதான் இதைச் செய்தது எனத் தெரியவந்தது. இதையடுத்து அகமதாபாத்திலிருந்து சென்னை வந்த சைபர் கிரைம் போலீஸார், ஜோஷில்டாவை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.