விண்வெளியில் பயணம் செய்ய தயாராகும் 23 வயது ஆந்திர இளம் பெண்

0
333

 23 வயதே நிரம்பிய ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் ஜானவி தங்கேட்டி, வரும் 2029-ம் ஆண்டு விண்வெளியில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பாலகொல்லு பகுதியை சேர்ந்தவர் ஜானவி தங்கேட்டி(23). பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர், அமெரிக்காவின் டைடன்ஸ் விண்வெளி பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதன்மூலம் வரும் 2029-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜானவி தங்கேட்டி 5 மணி நேரம் வரை விண்வெளியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இவர்தான் டைடன்ஸ் விண்வெளி வீராங்கனை பயிற்சித் திட்டம் மூலம் பயணம் செய்ய உள்ள முதல் இந்திய பெண் என்னும் பெருமையையும் இவர் பெறவுள்ளார். ஜானவிக்கு விண்வெளியில் பயணம் செய்ய தகுந்த பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஜானவி தங்கேட்டி சமூக வலைத்தளம் மூலம் கூறியுள்ளதாவது:

அடுத்த 2026-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்டுகள் டைடன்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளேன். இம்முறை எனக்கு விண்வெளி இயக்கம், உருவகப்படுத்துதல், மருத்துவ மதிப்பீடு போன்றவை கற்பிக்கப்படும்.

இந்த அரிய வாய்ப்பினை அளித்த டைடன்ஸ் விண்வெளி மையத்துக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இந்த பயிற்சியில் இந்தியர்களின் பிரதிநிதியாக செல்வதால், இந்திய வம்சாவளியினருக்கும் பெருமை சேர்க்கும் என நினைக்கிறேன். எனது நீண்ட நாள் கனவு விரைவில் நிறைவேறும் என நினைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here