தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள என்.எஸ்.கிருஷ்ணன் சிலை கலைவாணர் அரங்கத்துக்கு மாற்றம்

0
252

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, சென்னை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அவரது சிலை, கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவில் அடுத்த ஒழுகினசேரியில் சுடலைமுத்துப்பிள்ளை – இசக்கி அம்மாள் தம்பதியருக்கு கடந்த 1908-ம் ஆண்டு மகனாக பிறந்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். நாகர்கோவில் சுடலைமுத்துப்பிள்ளை கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கிருஷ்ணன் என்பதாகும்.

கலையுலக மாமேதை ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன், தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் ஆவார். நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக ஆற்றலை பெற்றவர். நாட்டில் அறிவியல் கருத்துகள் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். சுமார் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், திரைப்படங்களில் சீர்திருத்த கருத்துகளை துணிவோடு எடுத்துக் கூறியவர்.

காந்தியடிகளிடம் பற்று: கலையுலகில் கருத்துகளை வழங்கியதுபோல, தனது வாழ்க்கையில் ஆயிரக்கணக்கானோருக்கு பணத்தை வாரி வழங்கியவர். காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் மிகுந்த பற்று கொண்டவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கடந்த 1957 ஆகஸ்ட் 30-ம் தேதி தனது 49-வது வயதில் காலமானார்.

அண்ணாவால் சிலை திறப்பு: சென்னை ஜி.என்.செட்டி சாலை – திருமலை பிள்ளை சாலை சந்திப்பில் அவரது சிலையை முன்னாள் முதல்வர் அண்ணா கடந்த 1969-ம் ஆண்டு திறந்து வைத்தார். கடந்த 2008-ம் ஆண்டு அப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டியபோது, அந்த சாலை சந்திப்பின் ஒரு பகுதியில் அவரது சிலை தற்காலிகமாக நிறுவப்பட்டது.

இந்த நிலையில், தற்போது உள்ள இடத்தில் இருந்து அவரது சிலையை அகற்றி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவ வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கையை ஏற்று, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டு, சென்னை வாலாஜா சாலையில் செய்தி, மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் விரைவில் நிறுவப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here