பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானின் லஷ்கர் தீவிரவாதிகள்: என்ஐஏ தீவிர விசாரணையில் உறுதி

0
174

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் லஷ்கர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் என்ஐஏ விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பட்கோட் பகுதியைச் சேர்ந்த பர்வைஸ் அகமது ஜோதர் மற்றும் ஹில் பார்க் பகுதியைச் சேர்ந்த பஷிர் அகமது ஜோதர் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். தாக்குதலில் 3 பேர் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு முன்பாக ஆயுதம் ஏந்திய 3 தீவிரவாதிகளுக்கும் ஹில்பார்க் பகுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இதுதவிர, அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளையும் செய்து கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். அந்த தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை மத அடையாளத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து சுட்டுக் கொன்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here