கைலாஷ் மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடக்கம்

0
123

5 ஆண்டுகளுக்குப் பின்னர் சிக்கிம் மாநிலகத்திலுள்ள நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடங்கியுள்ளது.

இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் கடந்த 2020-ல் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை நாதுலா கணவாய் வழியாகச் செல்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த யாத்திரை ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது கயிலை மலை மற்றும் மானசரோவர் ஏரிக்குச் செல்லும் புனிதப் பயணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த யாத்திரையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், நாதுலா கணவாய் வழியாக 33 பேர் அடங்கிய முதல் குழுவினர் நேற்று நாதுலா கணவாய் வழியாக யாத்திரைக்குப் புறப்பட்டனர். அவர்களுடன் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையைச் சேர்ந்த 2 அதிகாரிகள், ஒரு மருத்துவர் என மொத்தம் 36 பேர் யாத்திரைக்கு புறப்பட்டுள்ளனர்.

இந்த யாத்திரையை சிக்கிம் மாநில ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்துர் நேற்று கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஆளுநர் பேசும்போது, “இந்த வரலாற்று சிறப்புமிக்க மற்றும் ஆன்மிகப் பயணம், சிக்கிம் மாநிலத்தின் புனித பூமி வழியாக முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது சிக்கிம் மாநிலத்துக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் தருணமாகும். மீண்டும் யாத்திரை நாதுலா கணவாய் வழியாக தொடங்க உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here