ராக்கெட் தயாரிப்பு ஏலத்தில் எச்ஏஎல் வெற்றி

0
90

சிறிய வகை செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான ராக்கெட்டை தயாரிப்பதற்கான ஏலத்தில் தனியார் நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) வெற்றிபெற்றுள்ளது.

இதுகுறித்து இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (ஐஎன்-ஸ்பேஸ்) தலைவர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள ராக்கெட்டுகளை தனிப்பட்ட முறையில் தயாரிப்பதற்கான ஏலத்தை எச்ஏஎல் வென்றுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் விண்வெளி துறையில் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் அரசின் முயற்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.

அதானி டிபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜிஸின் ஒரு பிரிவான ஆல்பா டிசைன் டெக்னாலஜி, பாரத் டைனமிக்ஸ், எச்ஏஎல் ஆகியவை இறுதி ஏலத்துக்கு தகுதிபெற்றிருந்த நிலையில், எச்ஏஎல் எஸ்எஸ்எல்வி தொழில்நுட்பத்தை பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது.

பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் 500 கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட செயற்கைகோளை ஏவுவதற்கான ராக்கெட்டை உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெறுவதன் மூலம் எச்ஏஎல் சுயாதீனமாக எஸ்எஸ்எல்வி ஏவுதல்களை உருவாக்க, சொந்தமாக வைத்திருக்க மற்றும் வணிகமயமாக்கும் திறன்களைப் பெறமுடியும். இவ்வாறு பவன் கோயங்கா தெரிவித்தார்.

எச்ஏஎல் 59 மில்லியன் டாலர் அதாவது 511 கோடி ரூபாய்க்கு இந்த ஏலத்தை எடுத்துள்ளது. அதன்படி இஸ்ரோ இரண்டு ஆண்டுகளுக்கு எச்ஏஎல்-க்கு வழிகாட்டும். இந்த காலத்தில் இஸ்ரோவின் வடிவமைப்பு மற்றும் சப்ளையர்களை பயன்படுத்தி இரண்டு எஸ்எஸ்எல்வி யூனிட்டுகளை எச்ஏஎல் தயாரிக்கும்.

மூன்றாவது யூனிட்டிலிருந்து வடிவமைப்பை செம்மைப்படுத்தி அதன் சொந்த விற்பனையாளர்களை தேர்ந்தெடுக்க எச்ஏஎல்-க்கு சுதந்திரம் இருக்கும். இந்த வளர்ச்சி பெருமைமிக்க மைல்கல் என்று எச்ஏஎல் நிதி இயக்குநர் பி.சேனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த அறிவுப்புக்குப் பிறகு எச்ஏஎல் பங்குகள் 1.50 சதவீதம் வரை உயர்ந்து ரூ.4,971-க்கு வர்த்தகமாயின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here