தலா ரூ.1 கோடி இழப்பீடு அறிவித்த டாடா குழுமம்; போயிங் நிறுவனத்துக்கு நெருக்கடியா?

0
154

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது.

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அகமதாபாத் நகரிலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறேன். இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான தருணத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை ஆதரிப்பதில் முழு கவனம் செலுத்துகிறோம்.

சம்பவம் நடந்த இடத்தில் அவசரகால மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கும், பாதிக்கப் பட்டவர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். மேலும் விபத்து தொடர்பாக கிடைக்கும் தகவல்கள் உடனுக்குடன் பகிரப்படும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உதவ அவசரகால மையம் திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் முதல் விபத்து: போயிங் நிறுவனத்தின் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம் கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 14 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு சுமார் 1,000 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், எந்த விமானமும் விபத்தில் சிக்கியதில்லை.

பெரிய விமானங்களில் வேகமாக செல்லக்கூடியது இந்த விமானம். இந்த ரக விமானம் எரிபொருளையும் 25 சதவீதம் மிச்சப்படுத்தும். இந்த ரக விமானத்தில் இதுவரை 100 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். மிகவும் பாதுகாப்பான விமானமாக கருதப்பட்ட போயிங் ட்ரீம்லைனர் விமானம், தற்போது முதல் முறையாக மேலே எழும்ப முடியாமல் தரையிறங்கி விபத்தில் சிக்கியுள்ளது. இதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

போயிங் நிறுவனம் சொல்வது என்ன? – போயிங் நிறுவனத்தின் ட்ரீம்லைனர் விமானம் விபத்தில் சிக்கியதையடுத்து அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் கண்ட நிலையில் விபத்து குறித்து கூடுதல் தகவல்களை சேகரித்து வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போயிங் வெளியிட்ட அறிக்கையில், “ ஆரம்பகட்ட அறிக்கைகள் கிடைத்துள்ளன. மேலும், தகவல்களை சேகரிக்க தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

பாரிஸ் நகரில் ஏர் ஷோ தொடங்க உள்ளது. இதில், போயிங் மற்றும் அதன் ஐரோப்பிய போட்டி நிறுவனமான ஏர்பஸ் தங்கள் விமானங்களை காட்சிப்படுத்தி வாடிக்கையாளர்களிடமிருந்து ஜெட் ஆர்டர்களை பெறுவதற்கு போட்டியிடவுள்ள நிலையில் இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது. இது, போயிங் நிறுவனத்துக்கு நெருக்கடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here