டெல்லியில் பெண் நீதிபதியை கடுமையாக திட்டிய வழக்கறிஞருக்கு 18 மாத சிறை தண்டனை

0
119

வழக்கு விசாரணையின்போது பெண் நீதிபதியை மோசமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்திய வழக்கறிஞருக்கு விதிக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனையை குறைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த 2015-ம் ஆண்டு கிழக்கு டெல்லியில் உள்ள கர்கர்டூமா நீதிமன்றத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்கு நடைபெற்றது. அப்போது, கட்சிக்காரருக்கு ஆதரவாக வாதடிய வழக்கறிஞர் சஞ்சய் ரத்தோட், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக கோபமடைந்து பெண் விசாரணை நீதிபதியை மோசமான வார்த்தைகளால் திட்டத் தொடங்கினார்.

மேலும், அந்த பெண் நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார். இதையடுத்து, பெண் நீதிபதி சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் வழக்கறிஞர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு 18 மாத சிறைதண்டையும், மேலும், இரண்டு குற்றங்களுக்காக தலா 3 மாத சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது.

கூடுதல் அமர்வு மேல் முறையீட்டில் தண்டனையை உறுதி செய்ததுடன், பெண் நீதிபதிக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டிலும், பெண் நீதிபதி தனது அதிகாரப்பூர்வ கடமையைச் செய்யும்போது தனிப்பட்ட தாக்குதலுக்கு ஆளானதாக கூறி 18 மாத சிறை தண்டனையை உறுதி செய்தது.

இந்த நிலையில், 18 மாத சிறை தண்டனையை 6 மாதமாக குறைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தண்டனைக்கு உள்ளான வழக்கறிஞர் சஞ்சய் ரத்தோட் கூறுகையில், “ வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்கிய குடும்பத்தின் வருமானம் ஈட்டும் ஒரே நபர் நான்தான். எனவே, கருணை காட்டி தண்டனை காலத்தை குறைக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், “ டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கனவே தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மொத்த சிறைவாசக் காலம் இரண்டு ஆண்டுகளில் இருந்து 18 மாதங்களாக குறைந்துள்ளது. எனவே, இந்த வழக்கில் இதற்கு மேல் கருணை காட்ட முடியாது. வழக்கறிஞரின் மனு நிராகரிக்கப்படுகிறது. மீதமுள்ள சிறைத்தண்டனையை அனுபவிக்க இரண்டு வாரங்களுக்குள் வழக்கறிஞர் சரணடைய வேண்டும்.

விசாரணை நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 50% பெண் நீதித்துறை அதிகாரிகளாக உள்ளனர். அவர்களின் கண்ணியம் பாதுகாக்கப்படாவிட்டால், அது நீதிமன்ற அறையில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கும். இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here