ரவி மோகன் கதையின் நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘ப்ரோகோட்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கிறார்.
‘டிக்கிலோனா’, ‘வடக்குப் பட்டி ராமசாமி’ படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கும் இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நான்கு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஹர்ஷவர்தன் இசையமைக்கிறார்.
நகைச்சுவையுடன் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாக உருவாகும் இந்தப் படம் பற்றி கார்த்திக் யோகி கூறும்போது, “இதன் கதையை ரவி மோகனிடம் விவரித்தபோது மிகவும் ரசித்தார். படத்தைத் தயாரிக்கவும் முன்வந்தார். இதில் ‘ஸ்லாப்ஸ்டிக்’ பாணியிலான நகைச்சுவை காட்சிகள் இடம் பெறும். இந்தப் படம் வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும்” என்றார்.














