உ.பி. கோயிலில் ம.பி. நீதிபதியின் தாலி சங்கிலி திருட்டில் 10 பெண்கள் கைது

0
113

உத்தர பிரதேச மாநிலம் மதுரா நகரில் உள்ள கோயிலுக்கு வந்த பெண் நீதிபதியிடம் தாலி சங்கிலி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, 10 பெண்கள் கொண்ட திருட்டு கும்பலை போஸீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளர் ஷ்லோக் குமார் கூறியுள்ளதாவது: மத்திய பிரேதச மாநிலம் உஜ்ஜைனில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றுபவர் பிரேமா சாகு. இவர், பிருந்தாவனில் உள்ள ஸ்ரீ ராதா கிருஷ்ணா கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்திருத்தார். அப்போது, நீதிபதியின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி திருடுபோனது.

இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் 10 பெண்களைக் கொண்ட திருட்டு கும்பலை போலீஸார் அடையாளம் கண்டு கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இதுபோன்று கைவரிசையை காட்டியுள்ளது விசாரணையில் அம்பலமானது.

அவர்களிடமிருந்து ஆண் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் ஏராளமான பர்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் பணம், ஆதார் கார்டு, பான் கார்டு, டெபிட் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட இதர முக்கியமான ஆவணங்களும், ரூ.18,652 ரொக்கமும் இருப்பது கண்டறியப்பட்டது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளட்ட மாநிலங்களிலிருந்து வந்து திருட்டுதொழிலில் ஈடுபட்டதை அந்த பெண்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். பிருந்தாவன் மற்றும் மதுராவில் உள்ள கோயில்களில் நெரிசல் மிகுந்த நேரங்களில் பிக்பாக்கெட், தொலைப்பேசி மற்றும் மதிப்புமிக்க நகைகளை திருடுவதை அவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன, கைது செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு ஷ்லோக் குமார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here