உத்தர பிரதேச மாநிலத்தில் வாகனங்களை பதிவு செய்யும்போது வாகன விற்பனையாளர்கள் பலர் விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை என்ற புகார் உள்ளது. இதையடுத்து மாநில அரசு 25 வாகன விற்பனையாளர்களின் வர்த்தக உரிமங்களை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்துள்ளது. ஜூன் 3-ம் தேதி தொடங்கிய இடைநீக்க காலத்தில் லக்னோ, பாராபங்கி, சீதாபூர், குஷிநகர், மொரதாபாத் மற்றும் பிரயாக்ராஜ் உள்ளிட்ட மாவட்டங்களின் விற்பனையாளர்கள் சிக்கி உள்ளனர்.
இந்த விற்பனையாளர்கள் 25 பேரும், வாகனங்களை விற்கவோ அல்லது பதிவு கோரிக்கைகளை பதிவேற்றவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் புதிய வாகனங்கள் பதிவுக்கான ‘வாஹன்’ இணையத்திலும் இந்த 25 விற்பனையாளர்களும் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உ.பி. போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கையில், ‘‘சம்பந்தப்பட்ட 25 விற்பனையாளர்களையும் பலமுறை எச்சரித்தோம். கடந்த ஜனவரி முதல் மே 2025 வரையிலான அவர்களது பதிவுகள் குறித்து தீவிர ஆய்வு நடத்தப்பட்டது. 25 விற்பனையாளர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. வாகனப்பதிவு துறை போதிய அவகாசம் வழங்கியும், அவர்கள் தங்கள் நடவடிக்கையை மேம்படுத்தவோ அல்லது திருப்திகரமாக பதிலளிக்கவோ தவறிவிட்டனர்’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.