நாடு முழுவதும் சிகிச்சையில் இருக்கும் கரோனா நோயாளிகள் 4,866 ஆக உயர்வு

0
131

நாடு முழுவதும் புதிதாக 564 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கு உருமாற்றம் பெற்ற எல்எப்.7, எக்ஸ்எப்ஜி, ஜேஎன்.1 ஆகிய புதிய வைரஸ்களும் சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட என்பி.1.8.1 என்ற துணை திரிபும் காரணமாக உள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரப்படி நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 564 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் 3 பேர், டெல்லி, கர்நாடகாவில் தலா இருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 6 பேர் முதியவர்கள் மற்றும் இணை நோய் கொண்டவர்கள் ஆவர்.

சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையில் 1,487 பேருடன் கேரளா முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து மகாராஷ்டிரா 526, குஜராத் 508, டெல்லி 562, மேற்கு வங்கம் 538, கர்நாடகா 436, தமிழ்நாடு 213 என்ற எண்ணிக்கையில் சிகிச்சையில் உள்ளனர்.

மேற்கு வங்கத்தில் புதிதாக 106 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 538 ஆகவும் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 61 ஆகவும் உள்ளது. 24 மணி நேரத்தில் கரோனா நோயாளி எவரும் உயிரிழக்காத நிலையில் மொத்த உயிரிழப்பு 1 ஆக நீடிக்கிறது. இதுபோல் ம.பி.யின் இந்தூரில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here