வடகிழக்கு மாநிலங்களில் மழை, நிலச்சரிவால் உயிரிழப்பு 36 ஆக உயர்வு: முதல்வர்களுடன் மோடி ஆலோசனை

0
106

வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் உயிரிழப்பு எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வெள்ள நிலவரம் குறித்து, மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். நிவாரணப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என அவர் உறுதியளித்தார்.

அசாம், மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பு மிகவும் மோசமடைந்துள்ளது. அங்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளனர். சிக்கிம் மாநிலத்தில் சாட்டன் எனும் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

அசாம், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுராவில் அதிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் மற்றும் மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லா ஆகியோரிடம் பிரதமர் மோடி பேசி வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். நிவாரண பணிகளுக்கான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் ஹிமந்த பிஸ்வா வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ அசாம் வெள்ள நிலவரம் குறித்து பிரதமர் மோடி விசாரித்தார். அசாம் மற்றும் அண்டை மாநிலங்களில் பெய்துவரும் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்தும், நிவாரண பணிகள் குறித்தும் அவரிடம் விளக்கினேன். வெள்ள பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, நிவாரணப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என உறுதியளித்தார். அவரது ஆதரவுக்கும், வழிகாட்டுதலுக்கும் நன்றி’’ என தெரிவித்துள்ளார்.

சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் விடுத்துள்ள செய்தியில், ‘‘ சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். அவருக்கு சிக்கிம் மக்கள் சார்பில் நன்றி. மழை பாதிப்புகளை சமாளிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை வழங்குவதில் மாநில நிர்வாகம் உறுதியுடன் உள்ளது. மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் பிரதமர் மோடிக்கு நன்றி’’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here