சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி திருவள்ளுவர்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

0
265

 சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி வள்ளுவர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். திருச்சி அருகேயுள்ள குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோயிலில் ரூ.22 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டினார். மேலும், கோயில் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி ஐயங்கார் எழுதிய ‘குணசீல மஹாத்மியம்’, சென்னகரை சுப்பிரமணியன் எழுதிய ‘வள்ளுவத்தில் மெய் ஞானம்’ ஆகிய நூல்களை ஆளுநர் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: உலகின் பல நாடுகள் ஆட்சியாளர்களாலும், ராணுவத்தாலும் கட்டமைக்கப்பட்டவை. ஆனால், பாரதம் ரிஷிகளாலும், துறவிகளாலும், சனாதன தர்மத்தாலும் உருவான நாடு. அதனால், உலக அளவில் பாரதம் தனித்துவம் பெற்ற நாடாகத் திகழ்கிறது.

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தர்மம் ஒன்றுதான். அது சனாதன தர்மம் மட்டும்தான். பாரதம், தர்மம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தர்மம் அழிந்தால், நாடு அழிந்துவிடும். யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் உருவாகக் காரணமாக இருப்பவை கோயில்கள்.

அத்தகைய தெய்வீக உத்தரவுகள் நிறைவேற்றப்படும்போது நாடு தெய்வீக தேசமாக ஒளிரும். திருக்குறள் ஒரு ஆன்மிகப் புத்தகம். சில அரசியல் சிந்தனையாளர்கள், ஆன்மிகத்தில் இருந்து திருக்குறளைப் பிரிக்கப் பார்க்கிறார்கள். சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி திருவள்ளுவர். இவ்வாறு அவர் பேசினார்.

யதுகிரி யதிராஜ மடம் 41-வது பட்டம் எதிராஜா நாராயண ராமானுஜ ஜீயர் பேசும்போது, “குணசீலம் கோயிலில் வீற்றிருக்கும் வேங்கடாஜலபதி, செங்கோலுடன் ஆட்சி புரிந்து வருகிறார். பக்தர்களுக்கு அபிவிருத்தி, நிம்மதி, சந்தோஷத்தை வழங்கி, மனோ வியாதிகளையும் தீர்க்கும் தலமாக குணசீலம் உள்ளது. இக்கோயில் 2-வது திருப்பதியாக மாறவேண்டும்” என்றார். விழாவில், திருச்சி தினமலர் ஆசிரியர் ஆர்.ராமசுப்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அறங்காவலர் நாராயணன் நன்றி கூறினார்.

முன்னதாக, பிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் கோயிலில், ஆளுநர் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, அவருக்கு மண்டல இணை ஆணையர் கல்யாணி தலைமையில் அறநிலைத் துறையினர் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here