சாவர்க்கர்-கோட்சே ரத்த சம்பந்தமான உறவினர்கள் அவதூறு வழக்கு: பிரமாணப் பத்திரத்தில் ராகுல் காந்தி தகவல்

0
113

இந்துத்துவா சித்தாந்தவாதியான விநாயக் சாவர்க்கர் மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் ரத்த சம்பந்தமான உறவினர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். சாவர்க்கரின் பேரன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்ததை அடுத்து, புனே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளார்.

கோட்சேவுடன் தன்னை இணைக்கும் தனது தாய்வழி வம்சாவளியை சத்யாகி சாவர்க்கர் வேண்டுமென்றே மறைத்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். லண்டனில் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சாவர்க்கர் குறித்து பேசியதற்காக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கை சத்யாகி சாவர்க்கர் தொடர்ந்தார். சாவர்க்கர் எழுதிய புத்தகத்தில், ஒரு முறை அவரும் சில நண்பர்களும் சேர்ந்து முஸ்லிம் நபரை அடித்ததாகவும், அதனை அவர்கள் மகிழ்ச்சியாக உணர்ந்ததாகவும் சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக சத்யாகி சாவர்க்கர் குற்றம்சாட்டியிருந்தார்.

அதுபோன்ற எந்த சம்பவமும் நடக்கவில்லை, எழுதவும் இல்லை. கற்பனையான, பொய்யான, சாவர்க்கரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ராகுல் காந்தி அவ்வாறு பேசியதாக சத்யாகி சாவர்க்கர் தொடுத்த அவதூறு வழக்கில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த அவதூறு வழக்கு தொடர்பாக தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது: தகவலின்படி புகார்தாரரின் (சத்யாகி சாவர்க்கர்) தாயார் ஹிமானி அசோக் சாவர்க்கர் 31/03/1947 -ல் புனேவில் பிறந்து 11/10/2015 -ல் மறைந்தார். மறைந்த திருமதி ஹிமானி அசோக் சாவர்க்கர், தேசத்தந்தை மகாத்மா காந்தியை 30/01/1948 அன்று கொன்று, அவரது கூட்டாளியான நாராயண் ஆப்தேவுடன் 15/11/1949 அன்று தூக்கிலிடப்பட்ட நாதுராம் விநாயக் கோட்சேவின் இளைய சகோதரர் கோபால் விநாயக் கோட்சேவின் மகள் ஆவார்.

ஹிமானி சாவர்க்கர், ஒரு இந்துத்துவா ஆர்வலர் என்றும், விநாயக் சாவர்க்கரின் மருமகன் அசோக் சாவர்க்கரை அவர் மணந்துகொண்டார் என்றும் ராகுல் காந்தி தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். காந்தி படுகொலை வழக்கில் விநாயக் சாவர்க்கர் இணை குற்றவாளியாக இருந்தார், ஆனால் விடுவிக்கப்பட்டார் என்றும் பிரமாணப் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புகார்தாரரான சத்யாகி சாவர்க்கர், நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துவதற்காக தனது தாய்வழி பக்கத்திற்கான குடும்ப சொந்தத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரது தந்தைவழி சொந்தத்தை மறைத்து விட்டார் என ராகுல் காந்தி பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

புகார்தாரரின் தாத்தா கோபால் கோட்சே மகாத்மா காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர். எனவே இவரது தாய்வழி குடும்பம் முக்கியமானது. புகார்தாரர் சுத்தமான காரணங்களுடன் நீதிமன்றத்தை அணுகவில்லை. நீதிமன்றத்திலிருந்து முக்கிய உண்மையை மறைப்பது ஒரு தீவிரமான பிரச்சினையாகும், இது நீதிமன்றத்தை ஏமாற்றுவதாகக் கருதப்படும். மேலும் இது ஒரு வழக்கை தள்ளுபடி செய்யவோ அல்லது நிவாரணத்தை மறுப்பதற்கோ வழிவகுக்கும் என்று ராகுல் காந்தி பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here