கமல்ஹாசனுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன்? – சீமான் கேள்வி

0
117

கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராடும்போது, தமிழகத்தில் அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகரில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து 18 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, தற்போது கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று கூறுவது வெற்று அரசியல்.

பொள்ளாச்சி மற்றும் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்கியதற்கு நாங்கள்தான் காரணம் என்று கூறும் திமுக, டாஸ்மாக் மதுவால் ஏற்படும் மரணங்களுக்கு நாங்கள்தான் காரணம் என்று சொல்வதில்லை.

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. கமல்ஹாசன் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராடும்போது, தமிழகத்தில் அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன்? தமிழக முதல்வராக இருந்துகொண்டு, கர்நாடக தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், கர்நாடகாவுக்கு எதிராக எப்படி கருத்து கூறுவார்.

வாஜ்பாய் ஆட்சியை 5 ஆண்டுகள் நிலைபெற வைத்து, நாடு முழுவதும் பாஜகவை வளரச் செய்தது கருணாநிதி என்று ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். ஆனால், 3 ஆண்டுகளில் 1 லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பல்வேறு போராட்டங்களுக்கு திமுக அரசு அனுமதி வழங்கவில்லை என்பதுதான் உண்மை. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here