குமரி மாவட்டம் பேச்சிப்பாறை வனப் பகுதிகளில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதிகளில் சரியான பாதை மற்றும் மின் வசதி இல்லாமல் பாதுகாப்பு இல்லாத வகையில் மக்கள் வாழ்கின்றனர். சமீப காலமாக யானைகள் இந்த பகுதிகளில் புகுந்து வீடுகளை தாக்கி சேதப்படுத்துவதும் மக்களை தாக்கி கொல்லும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் அடக்காடு என்ற இடத்தில் முண்டன்காணி என்பவர் வீட்டை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியது. இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள மணிக்காணி, விஜி மற்றும் குண்டன்காணி ஆகியோரின் வீடுகளின் அருகில் பயங்கர பிளிறல் சத்தத்துடன் யானை வந்துள்ளது. அந்த யானை அவர்களது வீடுகளை தாக்கியதில் மணிக்காணி மற்றும் விஜியின் வீடுகள் சேதம் அடைந்தது. மேலும் பழங்குடி மக்கள் பயிரிட்டுள்ள பயிர்களையும் நாசமாக்கியது. அப்போது காட்டில் வீடுகளில் இருந்து இருளில் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். சுமார் ஒரு மணி நேரம் வரை அந்தப் பகுதியில் மறைந்து இருந்து விட்டு யானை சென்ற பிறகு மீண்டும் வீடுகளுக்கு மக்கள் வந்து அடைந்தனர். இது குறித்து களியல் வனச்சரக அலுவலகத்தில் அப்பகுதியினர் புகார் செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.