சென்னை பசுமைவழி சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வீட்டுக்கு குண்டுமிரட்டல்

0
134

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

டிஜிபி மற்றும் சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி அலுவலகங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு கடிதம் வந்தது. அதில், ‘சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழி சாலையில் உள்ள தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி வீட்டில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடிக்கும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில், வெடிகுண்டு கண்டறியும் போலீஸார் மோப்பநாயுடன் விரைந்து வந்து பழனிசாமி வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். அதேபோல மெட்டல் டிடெக்டர் மூலமாகவும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அங்கு வெடிபொருள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால், வதந்தி பரப்பும் நோக்கத்துடன் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அபிராமபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, சேலத்தில் உள்ள இபிஎஸ் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக சென்னையில் உள்ள காவல் துறை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு கடந்த 25-ம் தேதி தகவல் வந்தது. அந்த மிரட்டலும் வெறும் வதந்தி என சோதனைக்கு பிறகு தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here